தீபாவளியை ஒட்டி 3,800 அடி உயர தேவீரம்மா கோவில் நடை திறப்பு
தீபாவளியை ஒட்டி 3,800 அடி உயர தேவீரம்மா கோவில் நடை திறப்பு
ADDED : நவ 01, 2024 07:00 AM
சிக்கமகளூரு: தீபாவளியை ஒட்டி அடிவாரத்தில் இருந்து 3,800 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள தேவீரம்மா கோவில் நடைதிறக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு தாலுகா, மல்லேனஹள்ளி அருகே பின்டுகா என்ற கிராமத்தில் தேவீரம்மா கோவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில், தீபாவளியை ஒட்டி திறக்கப்படும். முரசு கொட்டினால் கோவிலின் நடை தானாக திறப்பது இந்த கோவிலில் நடக்கும் அதிசயம்.
இதனால் ஆண்டுதோறும் கோவில் நடை திறக்கும்போது பக்தர்கள் இங்கு குவிந்து விடுவர். தீபாவளியையொட்டி, நேற்று முன்தினம் மாலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.
சிக்கமகளூரு உட்பட கர்நாடகாவின் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, மலையில் பக்தர்கள் ஏற ஆரம்பித்தனர்.
அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர். மலையில் இருந்து யாரும் வழுக்கி விழுந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கோவில் நடை, இன்று மாலை மூடப்படும்.

