18 படிகளில் போலீசார் போஸ் விளக்கம் கேட்டார் ஏ.டி.ஜி.பி.
18 படிகளில் போலீசார் போஸ் விளக்கம் கேட்டார் ஏ.டி.ஜி.பி.
ADDED : நவ 27, 2024 02:17 AM
சபரிமலை:சபரிமலை 18 படிகளில் 30 போலீசார் போஸ் கொடுத்து போட்டோ எடுத்த சம்பவத்தில் சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரியிடம் ஏ.டி.ஜி.பி. விளக்கம் கேட்டுள்ளார்
சபரிமலையில் கடந்த ஆண்டு போல் நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவசம் போர்டும், போலீசும் பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக 18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி விடுவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டனர். முதற்கட்டமாக வந்த 30 போலீசார் நவ.25-ல் பணி நிறைவு பெற்று ஊர் திரும்பினர்.
முன்னதாக தாங்கள் பணியாற்றிய 18 படிகளில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது நாளிதழ், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
இது சபரிமலை ஐதீகங்களுக்கு எதிரானது என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதை தொடர்ந்து சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி பைஜுவிடம், சபரிமலை பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் அதிகாரியான கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் விளக்கம் கேட்டுள்ளார். விளக்கம் கிடைத்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
உயர்நீதிமன்றம் உத்தரவு: இதற்கிடையில் இந்தவிவகாரத்தில் தலையிட்ட கேரள உயர்நீதிமன்றம் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில டி.ஜி.பி.,க்கும், உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு கமிஷனருக்கும் உத்தரவிட்டுள்ளது.