நகை அடகு நிறுவனங்களின் அடாவடி; பார்லி.,யில் மத்திய அரசு எச்சரிக்கை
நகை அடகு நிறுவனங்களின் அடாவடி; பார்லி.,யில் மத்திய அரசு எச்சரிக்கை
ADDED : பிப் 11, 2025 03:07 AM

வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில், “வாடிக்கையாளர் நகைகளை வங்கி அல்லாத தங்க நகை அடகு நிறுவனங்கள் ஏலம் விடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவகாசம்
“வங்கி சாராத நிதி நிறுவனங்களில் தங்க நகை கடன் வாங்கியவர்கள், அதை திருப்பி கட்டுவதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படாத நிலையில், இதுபோன்ற திடீர் ஏலங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
''இத்தகைய ஏலம் விடும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா,” என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:
வங்கி அல்லாத கடன் நிறுவனங்கள் அல்லது வணிக வங்கிகள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகளைத் தான் ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.
தங்க நகை ஏலம், பலகட்ட செயல்முறைகளின் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் பாக்கி தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு, அதன்பிறகே ஏல நடவடிக்கை என்ற சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
கடுமையான நிபந்தனைகளுக்கு பின்பே, ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளர் சார்ந்த மாவட்டத்துக்குள் தான் ஏலம் நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டால் ஏலம் நடத்தவும் முடியாது.
நகை மதிப்பீடு முழுமை அடையாவிட்டாலும் ஏலம் விட முடியாது. ஏலத் தொகை நிர்ணயம் செய்வதிலும் பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கான நகை விலையில், 80 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கக்கூடாது. தங்கத்தின் விலையை வங்கிகள் அல்லாத கடன் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதுமில்லை.
நடவடிக்கை
ஏல நடவடிக்கைகளுக்கு முன், இதுபோன்ற கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். இவற்றை பின்பற்றாமல் நகை ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால், மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -