கோவில் பணத்தில் 'கை' வைக்கும் மசோதா மீண்டும் நிறைவேற்றம்
கோவில் பணத்தில் 'கை' வைக்கும் மசோதா மீண்டும் நிறைவேற்றம்
ADDED : மார் 01, 2024 06:31 AM
பெங்களூரு: ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களின் ஆண்டு வருமானத்தில், அரசுக்கு பங்கு தர வேண்டும் என்ற புதிய சட்ட திருத்த மசோதா, மேலவையில் தோல்வியடைந்த நிலையில், சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவில் பணத்தை அரசு பயன்படுத்துவதற்காக, கர்நாடக ஹிந்து சமய அறநிலைய சட்ட திருத்த மசோதா, கடந்த பிப்ரவரி 21ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதா படி, 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருக்கும் கோவில்கள், அரசுக்கு 5 சதவீதம் பணமும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வரும் கோவில்கள் 10 சதவீதம் பணமும் கொடுக்க வேண்டும்.
இந்த விஷயம், கர்நாடகா மட்டுமின்றி, நாடு முழுதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மாநில காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சட்ட மசோதா, கர்நாடக சட்ட மேலவையில் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், தோல்வி அடைந்தது.
அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து, அரசு தரப்பில் யோசிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த சட்ட திருத்த மசோதாவை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சட்டசபையில் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார்.
அவர் பேசுகையில், ''சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. மேலவையில் நிறைவேறவில்லை. எனவே சட்டசபை உறுப்பினர்கள் மீண்டும் அங்கீகரிக்கும்படி வேண்டுகிறேன்,'' என்றார்.
இதன் பின், சட்ட மசோதா மீது குரல் ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, நேற்றே கவர்னரின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் வழங்கினால், சட்டமாகும்.

