ரூ.23,500 கோடி மதிப்புள்ள அரிசியை தமிழகத்திற்கு வாரி வழங்கிய மத்திய அரசு
ரூ.23,500 கோடி மதிப்புள்ள அரிசியை தமிழகத்திற்கு வாரி வழங்கிய மத்திய அரசு
ADDED : ஆக 28, 2025 03:58 AM

சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர் களுக்கு, 2020 முதல் இம் மா தம் வரை, 78 லட்சம் டன் அரிசி, 5 லட்சம் டன் கோதுமையை, மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி பிரிவில் உள்ள, 93 லட்சம் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், தலா, 5 கிலோ அரிசி; 18.45 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, தலா, 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதுதவிர, முன்னுரிமையற்ற பிரிவுக்கு, 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
ரேஷனில் வழங்க மாதம், 3.30 லட்சம் டன் அரிசி தேவை. அந்தியோதயா, முன்னுரிமை பிரிவுகளுக்கான, 1.90 லட்சம் டன் அரிசியை, மத்திய அரசு கிலோ, 3 ரூபாய் விலையில் தமிழக அரசுக்கு வழங்கியது. மீதி, முன்னுரிமையற்ற பிரிவுக்கான அரிசியை, தமிழக அரசு கிலோ, 30 ரூபாய்க்கு வாங்கியது.
கடந்த, 2020ம் ஆண்டு துவக்கத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அந்த ஆண்டு மார்ச் இறுதியில், மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் முன்னுரிமை, அந்தியோதயா பிரிவினருக்கு, ஏற்கனவே வழங்கப்படும் அரிசியுடன் சேர்த்து, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக, 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்காக, இந்திய உணவு கழகம், தமிழகத்திற்கு மாதம், 1.80 லட்சம் டன் அரிசியை இலவசமாக வழங்கியது. அந்த ஆண்டு டிசம்பரில் இருந்து, கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், 2023 டிசம்பர் வரை கூடுதல் இலவச அரிசி வழங்கப்பட்டது.
பின், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அந்தியோதயா மற்றும் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கான அரிசியை, மாநில அரசுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது.
இதன் வாயிலாக, 2020 ஏப்ரலில் இருந்து, இம் மாதம் வரை, 78.34 லட்சம் டன் அரிசி, 5.53 லட்சம் டன் கோதுமையை, தமிழகத்திற்கு மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
சராசரியாக கிலோ அரிசி விலை, 30 ரூபாய், கோதுமை, 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், 23,500 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோதுமை, இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.