கான்வாய் குறுக்கே வந்த ஸ்கூட்டர் விபத்தில் சிக்கிய முதல்வர் கார்
கான்வாய் குறுக்கே வந்த ஸ்கூட்டர் விபத்தில் சிக்கிய முதல்வர் கார்
ADDED : அக் 29, 2024 04:49 AM
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் கான்வாய் குறுக்கே வந்த ஸ்கூட்டரால், அவரது கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கின.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முதல்வர் பினராயி விஜயன் நேற்று காரில் சென்றார்.
அவருக்கு பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. திருவனந்தபுரம் வாமணபுரம் பூங்கா சந்திப்பு அருகே முதல்வரின் கான்வாய் சென்றபோது, முன்னால் ஸ்கூட்டரில் சென்ற பெண் திடீரென இடதுபுறம் திரும்பினார்.
இதையடுத்து, கான்வாயில் முதலில் சென்ற போலீஸ் வாகனம் அவர் மீது மோதாமல் இருக்க வலதுபுறம் திரும்பியது.
இதையடுத்து, பின்னால் வந்த முதல்வரின் கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு வாகனங்களில் சென்ற போலீசார், உடனடியாக முதல்வரின் வாகனத்தை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் முதல்வர் உட்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
சிறிது நேரத்துக்கு பின் முதல்வரின் கான்வாய் அங்கிருந்து புறப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.