மும்பையில் நாட்டின் மிக நீண்ட கடல் பாலம் பிரமாண்டம்!
மும்பையில் நாட்டின் மிக நீண்ட கடல் பாலம் பிரமாண்டம்!
ADDED : ஜன 13, 2024 01:37 AM

மும்பை, மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் நவி மும்பையை இணைக்கும் நாட்டின் மிக நீண்ட கடல் பாலமான 'அடல் சேது' பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ''பிரமாண்ட திட்டங்கள் எல்லாம் முடிக்கப்படாமல் பாதியில் நின்றதை பார்த்து, கடந்த காலங்களில் மக்கள் நம்பிக்கை இழந்தனர். இந்த நிலை மாறும் என்று நான் அளித்த உத்தரவாதம் தற்போது உண்மையாகி உள்ளது,'' என, பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் இருந்து, ராய்காட் மாவட்டத்தில் உள்ள நவி மும்பையை இணைக்கும் பிரமாண்ட கடல் பாலம் அமைக்கும் திட்டத்துக்கு, 2016, டிச., 24ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
மொத்தம், 17,840 கோடி ரூபாய் செலவில், 21.8 கி.மீ., துாரத்துக்கு ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் 16.5 கி.மீ., துாரம் கடலுக்கு மேல் அமைந்துள்ளது.
இதுவரை, மஹாராஷ்டிராவில் உள்ள பாந்த்ரா - வோர்லி இடையிலான, 5.6 கி.மீ., நீளமுள்ள பாலமே, நம் நாட்டின் மீக நீளமான கடல் பாலமாக இருந்து வந்தது. தற்போது இருந்த பெருமை, அடல் சேது பாலத்துக்கு கிடைத்துள்ளது.
கடல் மேல் அமைக்கப்பட்ட நாட்டின் மிக நீண்ட பாலம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த பாலத்துக்கு, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மும்பை துறைமுகம் மற்றும் ராய்காட் மாவட்டத்தின் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை இந்த பாலம் இணைக்கிறது. இதன் வாயிலாக, மும்பையில் இருந்து நவி மும்பை செல்லும் பயண நேரம், ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக குறைந்துள்ளது.
மும்பை நகரங்களை மட்டுமின்றி, புனே, கோவா மற்றும் தென் மாநில பகுதிகளுக்கான போக்குவரத்தை இந்த பாலம் எளிதாக்கி உள்ளது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கடந்த 2016, டிச., 24ல் இந்த பாலத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு நான் வந்தபோது பல்வேறு தடங்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
நம் நாடு மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்க வேண்டும் என அப்போது தீர்மானித்தேன்.கொரோனா பெருந்தொற்று காலத்திலும், இடைவிடாது பாலம் கட்டுமானப்பணி தொடர்ந்து நடந்து இன்றைக்கு நிறைவேறியுள்ளது.
கடந்த 2014க்கு முன், பிரமாண்ட திட்டங்கள் அனைத்தும் முழுமை அடையாமல் பாதியில் நிற்பதை பார்த்து, மக்கள் நம்பிக்கை இழந்தனர். பிரமாண்ட திட்டங்கள் என்றாலே நிறைவேறாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிந்துவிட்டது.
நம் நாடு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்ற என் தீர்மானமும், மக்களுக்கு நான் அளித்த உத்தரவாதமும் இன்று உறுதியாகி உள்ளன.
கடந்த 2014க்கு முன், மத்திய அரசின் மெகா ஊழல்கள் மக்களின் விவாத பொருளாக இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்ட திட்டங்கள் நிறைவேறி வருவதே மக்களின் விவாதப் பொருளாகி உள்ளன.
மக்கள் கண்ட கனவு, கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேறி வருகிறது. வளர்ந்த இந்தியா திட்டத்தின் பிரதிபலிப்பாகவே இந்த பாலம் இன்றைக்கு ஜொலிக்கிறது.
நம் நாட்டின் உட்கட்டமைப்பு திறனையும், வளர்ந்த நாடாக உருமாறுவதற்கான நம் உறுதிப்பாட்டை நோக்கிய பயணத்தையும் இந்த பாலம் உணர்த்துகிறது.
நவி மும்பை சர்வதேச விமான நிலையம், மும்பை கடற்கரை சாலை, அவுரங்காபாத் தொழில் நகரம், மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் ஆகியவை வளர்ச்சி திட்டங்களின் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.
இந்த நேரத்தில் ஜப்பான் நாட்டுக்கும், அந்நாட்டின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மும்பை துறைமுக இணைப்பு திட்ட பாலத்தை விரைவில் முடிக்க நாங்கள் இருவரும் உறுதி ஏற்று இருந்தோம்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.