ADDED : ஜன 29, 2024 07:33 AM
மங்களூரு: காட்டில் தீ பரவாமல், தடுக்க முற்பட்ட மூத்த தம்பதி தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
தட்சிண கன்னடா, பன்ட்வாலின், அம்டாடி கிராமம் அருகில் உள்ள, துண்டு பதவு என்ற இடத்தில் வசித்தவர் கில்பர்ட், 78. இவரது மனைவி கிறிஸ்டினா கார்லோ, 70. தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசிக்கின்றனர்.
கடந்தாண்டு தம்பதியின், 50வது திருமண நாளை, லோரெட்டோ தேவாலய ஹாலில், ஆடம்பரமாக கொண்டாடினர்.
இவர்கள் வீட்டின் அருகில் உள்ள, மேட்டுப்பகுதியில் குப்பை குவிந்து கிடந்தது.
இதை பார்த்த தம்பதி, நேற்று மதியம் 1:30 மணியளவில், குப்பைக்கு தீ வைத்தனர். இது மளமளவென பரவியது. இது அருகில் உள்ள வனப்பகுதியிலும் பற்றியது. இதை கட்டுப்படுத்த முற்பட்டபோது, தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து பன்ட்வால் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.