ADDED : பிப் 20, 2025 12:32 AM

பெங்களூரு : 'என் 70 வயது மாமியாரை கொல்ல, மாத்திரைகள் இருந்தால் தகவல் கொடுங்கள்' என, பெண் ஒருவர் அனுப்பிய குறுந்தகவல் குறித்து, பெங்களூரு சஞ்சய் நகர் போலீசில் டாக்டர் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூரு சஞ்சய் நகரில் தனியார் மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் சுனில் குமார். இவரின், 'வாட்ஸாப்' எண்ணுக்கு நேற்று பெண் ஒருவர் குறுந்தகவல் அனுப்பினார்.
அதில், 'என் மாமியாருக்கு 70 வயதாகிறது. கொடுமைப்படுத்துகிறார். அவரை கொல்ல எத்தகைய மருந்து கொடுக்கலாம் என்று யோசனை கொடுங்கள்' என குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுனில் குமார், 'நாங்கள் உயிரை காப்பவர்கள்' என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக அந்த குறுந்தகவலை அழித்த பெண், இவரின் மொபைல் எண்ணையும் 'பிளாக்' செய்துவிட்டார். இது உண்மையான தகவலா அல்லது யாராவது விளையாட்டாக அனுப்பினரா என்று யோசித்த டாக்டர் சுனில் குமார், சஞ்சய் நகர் போலீசில் புகார் அளித்தார்.
அவர் கூறுகையில், ''மாமியாரை கொல்ல மருந்து விபரங்களை கேட்ட பெண் குறித்து புகார் அளித்துள்ளேன். உயிரை காப்பாற்றவே நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் மாமியாரை கொல்ல மருந்து இருந்தால் தகவல் கொடுங்கள் என்று கேட்பது இதுவே முதன் முறை.
''பலருக்கும் இதுபோன்ற தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் புகார் அளித்துஉள்ளேன்,'' என்றார்.
போலீசார் கூறுகையில், 'டாக்டருக்கு குறுந்தகவல் வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. டாக்டர் அளித்த புகாரின்படி விசாரித்து வருகிறோம்,' என்றார்.
மாமியாரை கொல்ல மருத்துவரிடமே மருந்து விபரங்கள் கேட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.