உயிரிழந்த தொழிலாளி உடலை தரையில் இழுத்து சென்ற கொடூரம்
உயிரிழந்த தொழிலாளி உடலை தரையில் இழுத்து சென்ற கொடூரம்
ADDED : பிப் 20, 2025 06:44 AM

கலபுரகி: சிமென்ட் தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த தொழிலாளி உடலை, சக தொழிலாளிகள் தரையில் இழுத்துச் சென்ற கொடூரம் நடந்துள்ளது.
கலபுரகி மாவட்டம், சேடம் அருகே கோட்லா கிராமத்தில் சிமென்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை பணியில் இருந்த பீஹாரை சேர்ந்த சந்தன் சிங், 35, என்பவருக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த அவரை, வேறு சில தொழிலாளர்கள், துாக்கிச் செல்லாமல், தரையில் இழுத்துச் சென்றுள்ளனர்.
இதை பார்த்த சக தொழிலாளர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்து, 'வீடியோ' எடுத்துள்ளனர்.
அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். வீடியோ வேகமாக பரவியது. அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த உலகில் மனிதாபிமானம் மரித்துப் போய்விட்டதா? உயிரிழந்தவர் உடலை கவுரவமாக கொண்டு செல்ல முடியாத நாட்டில் இருக்கிறோமா என்று எல்லாம் கருத்து பதிவிட்டனர்.
அந்த வீடியோவை பார்த்த சேடம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் சந்தன் சிங் கீழே விழுந்த சில நிமிடங்களில் இறந்தது தெரிய வந்தது.
அவரது உடலை இழுத்துச் சென்றதாக தொழிலாளிகள் ஆறு பேரை கைது செய்தனர்.

