அடிப்படை பிரச்னைகள் குறித்து 2,600 பேர் புகார் தீர்த்து வைக்கும்படி துணை முதல்வர் உத்தரவு
அடிப்படை பிரச்னைகள் குறித்து 2,600 பேர் புகார் தீர்த்து வைக்கும்படி துணை முதல்வர் உத்தரவு
ADDED : ஜன 06, 2024 07:08 AM

எலஹங்கா: 'வாசலுக்கு வந்தது அரசு - சேவைக்கு இருக்கட்டும் ஒத்துழைப்பு' என்ற அரசு திட்டங்கள் வீட்டு வாசலுக்கு வழங்கும் நிகழ்ச்சியில், 2,600 பேர் புகார் மனு அளித்தனர். பலரது பிரச்னைகளை, துணை முதல்வர் சிவகுமார் தீர்த்து வைத்தார்.
பொது மக்கள் அரசு திட்டங்கள் பெறுவதற்காக, அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்கும் வகையில், 'வாசலுக்கு வந்தது அரசு - சேவைக்கு இருக்கட்டும் ஒத்துழைப்பு', என்ற அரசு திட்டங்கள் வீட்டு வாசலுக்கு வழங்கும் நிகழ்ச்சியை, பெங்களூரு நகர வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படுகிறது.
முதன்முறையாக, கே.ஆர்.புரம், மஹாதேவபுரா சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சி, ஐ.டி.ஐ., விளையாட்டு மைதானத்தில், இம்மாதம் 3ம் தேதி நடத்தப்பட்டது.
லஞ்சம்
இது போன்று, எலஹங்கா, பேட்ராயனபுரா, தாசரஹள்ளி சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சி, எலஹங்கா நியூ டவுனில் உள்ள, அம்பேத்கர் பவனில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியை துணை முதல்வர் சிவகுமார் நேற்று துவக்கி வைத்தார். நேற்று காலை 11:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை துணை முதல்வர், மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்தார். “அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், தைரியமாக சொல்லுங்கள்,” என்றார்.
ஒரே நாளில், 2,600 பேர் தங்கள் பிரச்னைகள் குறித்து, மனு அளித்தனர். அவை உடனுக்குடன் ஒருங்கிணைந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டன. துறை வாரியாக, வார்டு அலுவலகங்களுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பிரச்னை தீர்த்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
பா.ஜ.,வின் எலஹங்கா எம்.எல்.ஏ., விஸ்வநாத், தாசரஹள்ளி எம்.எல்.ஏ., முனிராஜு, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், தமிழ் அதிகாரிகளான துணை முதல்வர் செயலர் ராஜேந்திர சோழன், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பெண்ணுக்கு வேலை
தாசரஹள்ளியின் திவ்யாஞ்சலி என்ற பார்வை குறைபாடு உள்ள ஒரு பெண், பி.ஏ., படித்துள்ளதாகவும், பி.டி.ஏ., வீட்டு மனை, மாநகராட்சியில் பணி வழங்கும்படி கோரினார். பார்வை குறைபாடு இருந்தும், பணிக்கு சென்று சுயமாக சம்பாதிக்க விரும்பியதால், மாற்றுத்திறனாளி கோட்டாவின் கீழ், வீட்டு மனை வழங்கும்படி பி.டி.ஏ., கமிஷனர் ஜெயராம்; பணி வழங்கும்படி மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத்துக்கும் துணை முதல்வர் உத்தரவிட்டார்.
“என்னிடம் பி.பி.எல்., ரேஷன் அட்டை இல்லை. சிறுநீரகம் செயலிழந்துவிட்டது. வாழ்க்கை போதும் என்றாகிவிட்டது,” என்ற தாசரஹள்ளியின் ராதம்மா என்ற பெண், கருணை கொலை செய்ய அனுமதிக்கும்படி கேட்டார். உடனே, “ஏம்மா அழாதே, நான் இருக்கிறேன். உன்னை கருணை கொலை செய்ய நான் வரவில்லை. உன் பிரச்னையை தீர்த்து வைக்க வந்துள்ளேன்,” என்று கூறி, பாக்கெட்டில் இருந்து, கைக்கு கிடைத்த பணத்தை எடுத்து சிவகுமார் அந்த பெண்ணிடம் தந்தார்.
நடைபாதை மீது வியாபாரம் செய்ய அனுமதி வழங்கும்படி, வித்யாரண்யபுராவின் வள்ளியம்மாள் கோரினார். “கவலைப்படாதே, தள்ளு வண்டி வாங்கித்தருகிறேன்,” என்று கூறி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
“சார், எங்கள் வீட்டு தண்ணீர் மீட்டர் ஓடுகிறது. ஆனால், தண்ணீர் வரவில்லை,” என்று கங்கேகவுடா என்பவர் புகார் கூறினார். உடனே அங்கிருந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளரை அழைத்து, “ஒரு வாரத்திற்குள் அவர் வீட்டுக்கு தண்ணீர் வர வேண்டும்,” என்று உத்தரவிட்டார். பின், “கங்கேகவுடரே, உங்கள் பிரச்னை தீரும்,” என துணை முதல்வர் கூறினார். அப்போது, அரங்கில் இருந்தவர்கள் கை தட்டினர்.