காங்கிரசுக்கு கிடைத்த நன்கொடை இரண்டு வாரங்களில் ரூ.10 கோடி
காங்கிரசுக்கு கிடைத்த நன்கொடை இரண்டு வாரங்களில் ரூ.10 கோடி
ADDED : ஜன 04, 2024 01:34 AM
புதுடில்லி லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் நடத்தும் நன்கொடை இயக்கத்தின் வாயிலாக, இரண்டு வாரங்களில், 10 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், பொதுமக்களிடம் இருந்து நன்கொடை திரட்டும் இயக்கத்தை காங்கிரஸ் துவக்கியுள்ளது. கட்சியின் 138வது ஆண்டை யொட்டி, கடந்த மாதம் 18ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இது அறிவிக்கப்பட்டது.
'தேசத்துக்காக நன்கொடை' என்ற பெயரில், 138 ரூபாய், 1,380 ரூபாய், 13,800 ரூபாய் என, 138ன் மடங்கில் நன்கொடை அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டு வாரங்களில் 10.15 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக, கட்சி பொருளாளர் அஜய் மாக்கன், சமூக வலைதளத்தில்குறிப்பிட்டு உள்ளார்.
தெலுங்கானாவில் இருந்து அதிகபட்சமாக 1.72 கோடி ரூபாயும், ஹரியானாவில் இருந்து 1.21 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.