கேரளாவை உலுக்கிய இரட்டை கொலை; பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்
கேரளாவை உலுக்கிய இரட்டை கொலை; பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்
ADDED : ஜன 30, 2025 02:39 AM

பாலக்காடு: கேரளாவில், பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொன்ற நபர், சிறையில் இருந்து வெளியே வந்து கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாராவை சேர்ந்தவர் சுதாகரன், 55. இவரின் மனைவி சுஜிதாவை, பக்கத்து வீட்டில் வசித்த செந்தாமரா என்பவர், 2019ல் கொலை செய்தார்.
தன்னுடைய மனைவி பிரிவதற்கு முக்கிய காரணமாக சுஜிதா இருந்ததால், அவரை கொலை செய்ததாக செந்தாமரா கூறியிருந்தார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில், சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து செந்தாமரா ஜாமினில் வெளியே வந்தார்.
வலியுறுத்தல்
இதற்கிடையே, மனைவி இறந்த பின் மறுமணம் செய்த சுதாகரன், இரண்டாவது மனைவி, தன் தாயார் மற்றும் இரு மகள்களுடன் அதே வீட்டில் வசித்து வந்தார்.
சிறையில் இருந்து செந்தாமரா வெளியே வந்ததை அடுத்து, அவரால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவரை வேறு இடத்தில் குடியேற வைக்கும்படி சுதாகரன் குடும்பத்தினர் போலீசாரை கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி சுதாகரன் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த செந்தாமரா, அவரையும், 75 வயதான அவரது தாயார் லட்சுமியையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து செந்தாமரா தலைமறைவானார். சுதாகரனின் இரண்டாவது மனைவி மற்றும் மகள்கள் அகிலா, அதுல்யா ஆகியோர் வெளியே சென்று இருந்ததால், உயிர் தப்பினர்.
நெம்மாரா அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த செந்தாமரா, சில பொருட்களை எடுக்க தன் வீட்டிற்கு வந்தபோது போலீசாரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
அச்சம்
'மனைவியை கொலை செய்ததால், என்னை கொன்றுவிடுவார் என்ற பயத்தில் சுதாகரனை கொலை செய்தேன். என்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியையும் கொல்ல திட்டமிட்டு இருந்தேன்.
'அதற்குள் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்' என, செந்தாமரா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொலை நடந்த வீட்டில், மீண்டும் இரட்டைக் கொலை நடந்துஉள்ளது பாலக்காடு மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.