ADDED : நவ 13, 2024 09:48 PM

கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் சுற்றுலா பயணியரை கவர்ந்து இழுக்கும் இடங்களில் ஒன்று குரும்காட் தீவு.
கார்வார் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 4 கி.மீ.,யில் அமைந்துள்ளது. தீவை சுற்றி தேவபாக், சன்னியாசி, அஞ்ச தீபா, சிப்பி ஆகிய நான்கு தீவுகளும் உள்ளன.
ஆனால், அந்த நான்கு தீவுகளும் தனியாருக்கு சொந்தமானவை. குரும்காட் தீவு மராட்டிய ஆட்சியாளர்களுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. பழமையான கோட்டைகள் உள்ளன. தீவின் மலை உச்சியில் நரசிம்மர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆமை வடிவில் அமைந்திருப்பதால் ஆமை தீவு என்றும் சுற்றுலா பயணியர் சொல்கின்றனர்.
இந்த தீவு, நீர் விளையாட்டிற்கும் பெயர் பெற்றது. மீன் பிடித்து விளையாடுவது, தீவில் உள்ள மணலில் கைப்பந்து விளையாடுவது உள்ளிட்டவை சுற்றுலா பயனியரை மேலும் உற்சாகமடைய செய்யும்.
தீவின் அருகில் நீர் நாய் மற்றும் டால்பின்களையும் கண்டு ரசிக்கலாம். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை இந்த தீவுக்கு செல்ல உகந்த நேரம். கார்வார் காளி ஆற்றின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சதாசிவா காட் என்ற இடத்திலிருந்து தீவுக்கு படகு இயக்கப்படுகிறது. படகில் செல்ல கட்டணம் சீசனுக்கு சீசன் மாறுபடும்.
பெங்களூரில் இருந்து கார்வார் 521 கி.மீ.,யில் அமைந்துள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து பஸ் வசதி உள்ளது. தினசரி ரயில் சேவையும் உள்ளது.
விமானத்தில் செல்பவர்கள் மங்களூரு, ஹூப்பள்ளி, கோவா விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கார்வாரை சென்றடையலாம்.
- நமது நிருபர் --