கவர்னரை கண்டித்து மாநிலம் முழுதும் காங்கிரசார் இன்று போராட்டம்! முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு
கவர்னரை கண்டித்து மாநிலம் முழுதும் காங்கிரசார் இன்று போராட்டம்! முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு
ADDED : ஆக 18, 2024 11:41 PM

பெங்களூரு : முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து, மாநிலம் முழுதும் இன்று காங்கிரசார் போராட்டம் நடத்த உள்ளனர். 'அமைதியான முறையில் போராட வேண்டும்' என்று, தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, வரும் 22ம் தேதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன், சித்தராமையா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
மைசூரில் உள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு 2022ம் ஆண்டு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. தன் மனைவிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தியதற்கு பதிலாக, இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சித்தராமையா விளக்கம் அளித்தாலும், கையகப்படுத்திய நிலத்தை விட, அதிக மதிப்பிலான மனைகளை பார்வதிக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர், சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தார். தொடர்ந்து, மைசூரை சேர்ந்த சினேகமயி கிருஷ்ணா என்ற சமூக ஆர்வலரும், முதல்வர் மீது கவர்னிடம் புகார் அளித்தார்.
* ராஜினாமா
ஊழல் தடுப்பு சட்டம் 17வது பிரிவின் கீழ், சித்தராமையாவிடம் விசாரணை நடத்த நேற்று முன்தினம், கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார். இதன்மூலம் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து, லோக் ஆயுக்தா விசாரணை நடத்த முடியும். விசாரணை நடத்துவதற்கு கவர்னர் அனுமதி அளித்ததால், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
'எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்ய மாட்டேன். கவர்னருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவேன்' என்று, நேற்று முன்தினமே சித்தராமையா அறிவித்தார். கவர்னரை கண்டித்து நேற்று முன்தினமே போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர்நாடகா முழுதும் இன்று போராட்டம் நடத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு, துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் நேற்று அழைப்பு விடுத்தார்.
* முழு அடைப்பு
இதன்படி இன்று மாநில, தாலுகா தலைநகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்று, காங்கிரஸ் தொண்டர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. உஷாராக இருக்கும்படி துணை போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களுக்கும் தகவல் பறந்து உள்ளது.
இதற்கிடையில் நேற்று மதியம் அஹிந்தா சமூகத்தினர், மைசூரில் கூடி ஆலோசனை நடத்தினர். 'நாம் அனைவரும் முதல்வருக்கு, ஆதரவாக இருக்க வேண்டும். கவர்னருக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தி, சித்தராமையா யார் என்று காட்ட வேண்டும்' என்று முடிவு எடுத்தனர். மேலும் இன்று மைசூரு டவுனில் முழு அடைப்பு போராட்டத்திற்கும், அஹிந்தா சமூகம் அழைப்பு விடுத்து உள்ளது.
* டயருக்கு தீ
சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததை கண்டித்து, மாநிலத்தில் நேற்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தன. முதல்வரின் சொந்த ஊரான மைசூரு தகடூர் கிராமத்தில், கவர்னரின் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. கவர்னரின் புகைப்படத்தை செருப்பால் அடித்து, போராட்டக்காரர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
சிக்கமகளூரின் தரிகெரேயில் காங்கிரஸ் தொண்டர்கள், டயருக்கு தீ வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். யாத்கிரில், சித்தராமையாவின் ஆதரவாளர் ராஜ்குமார் என்பவர், தனி ஆளாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். பாகல்கோட் ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பன்னவர் ஆதரவாளர்கள் நேற்று காலை இலகல்லில் இருந்து, பாகல்கோட் பாதாமியில் உள்ள பனசங்கரி கோவில் வரை, பாதயாத்திரையாக சென்றனர். சித்தராமையா பெயரில் சிறப்பு புஜை செய்து வழிபட்டனர்.
* கபில் சிபல்
இந்நிலையில், கவர்னருக்கு எதிராக, சட்ட போராட்டம் நடத்துவது குறித்து, பெங்களூரு காவிரி இல்லத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று மதியம் சட்ட வல்லுனர்கள், வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் முதல்வரின் நெருங்கிய அமைச்சர்கள், முதல்வரின் சட்ட ஆலோசகரும், எம்.எல்.ஏ.,வுமான பொன்னண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கவர்னருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த, முதலில் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டுமா அல்லது கர்நாடக உயர்நீதிமன்றம் செல்ல வேண்டுமா என்று, ஆலோசிக்கப்பட்டது. முடிவில், கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு முதலில் செல்லலாம். அங்கு நியாயம் கிடைக்கா விட்டால், உச்சநீதிமன்றத்திற்கு செல்லலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
சித்தராமையா தரப்பில் மனு செய்ய, உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் இன்று பெங்களூரு வர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது. கவர்னர், தன் மீது வழக்கு தொடர அனுமதி அளித்ததும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நேற்று முன்தினம் இரவு, சித்தராமையா சந்தித்து பேசினார்.
'எதற்கும் பயப்படாதீர்கள். ராஜினாமா செய்ய வேண்டாம். சட்ட போராட்டம் நடத்துவோம்' என்று, கார்கே தைரியம் கூறி அனுப்பினார். மேலிட தலைவர்களும், சித்தராமையாவை தொடர்பு கொண்டு, 'கட்சி உங்களுடன் உள்ளது' என்று ஆறுதல் கூறி உள்ளனர்.
சித்தராமையாவுக்கு எதிராக செயல்படும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கும் தகவல் பறந்து உள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தனக்கு ஆதரவாக இருப்பர் என்று, சித்தராமையாவும் நம்புகிறார். வரும் 22ம் தேதி எம்.எல்.ஏ.,க்களுடன், பெங்களூரில் முக்கிய ஆலோசனையும் நடத்துகிறார்.
==============
பாக்ஸ்
மந்த்ராலயா பயணம் ரத்து
ஆந்திராவின் மந்த்ராலயாவில் உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு, இன்று முதல்வர் சித்தராமையா செல்ல இருந்தார். இதுவரை அவர் மந்த்ராலயா சென்றதே இல்லை. இந்நிலையில் கவர்னருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருப்பதால், மந்த்ராலயா பயணத்தை சித்தராமையா ரத்து செய்து உள்ளார்.
***

