பெங்களூரில் கட்டப்பட்ட முதல் அடுக்குமாடி குடியிருப்பு
பெங்களூரில் கட்டப்பட்ட முதல் அடுக்குமாடி குடியிருப்பு
ADDED : அக் 19, 2024 11:17 PM

பெங்களூரில் வானுயர்ந்த கட்டடங்கள் ஏராளம். இத்தகைய கட்டடங்கள் இல்லாத பகுதிகளை பார்க்க முடியாது. முன்பொரு காலத்தில், நகரில் அடுக்குமாடி கட்டடம் என்றால், பலருக்கும் தெரியாது.
கர்நாடகாவின் வெவ்வேறு நகரங்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் மக்கள், கல்வி, தொழில், வேலை என, பல நோக்கங்களுக்காக பெங்களூரில் அடைக்கலம் பெறுகின்றனர். உலகின் கவனத்தை தன் வசம் திருப்பும் நகரங்களில் பெங்களூரும் ஒன்று.
ஒரு காலத்தில் பெங்களூரை, 'ஏரிகளின் நகர்' என அழைத்தனர். அதன்பின் பூங்கா நகராக வளர்ந்தது.
இன்று நாட்டின், 'சிலிகான் வேலி', 'ஐ.டி., சிட்டி' என பிரசித்தி பெற்றது. கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, அகலமான சாலைகள் இருந்தன. பெரிய, பெரிய கட்டடங்கள் இல்லை. ஆனால் நாளடைவில் சூழ்நிலை மாறியுள்ளது.
சமீப ஆண்டுகளாக, நகரில் விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான கட்டடங்கள் அதிகரிக்கின்றன. பெங்களூரில் முதல் அடுக்குமாடி கட்டடம், எப்போது கட்டப்பட்டது என, பலருக்கும் தெரியாது. 1960ம் ஆண்டில் மும்பையில், அபார்ட்மென்ட் கலாசாரம் துவங்கியது.
சாந்திநகர் பி.எம்.டி.சி., பஸ் டெர்மினல் அருகே, சிக்னல் பக்கத்தில், 'தத்லானி மேன்ஷன்' உள்ளது. இதுவே பெங்களூரில் கட்டப்பட்ட முதல் அடுக்குமாடி கட்டடமாகும். 1968ல் கட்டப்பட்டது. மூன்று மாடிகள் கொண்ட குடியிருப்பு.
தரை தளத்தில் கடைகள் உள்ளன. மேற்பகுதியின் மூன்று மாடிகளில் மக்கள் வசிக்கின்றனர். சாந்திநகர் பிரதான சாலையில் செல்லும்போது பார்க்கலாம்.
தற்போது பெங்களூரின் பரப்பளவு விரிவடைந்துள்ளது; மக்கள்தொகை அதிகரித்துள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களின் மக்கள் பிழைப்பு தேடி வந்து, பெங்களூரில் குடியேறுகின்றனர். இவர்கள் வசிக்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஒரே கட்டடத்தில் பல வீடுகள் கட்டப்படுவதால் அதிகமானோர் வசிக்கலாம். வாடகைக்கும் விடலாம். தற்போது பெங்களூரில், அபார்ட்மென்ட் கலாசாரம் அதிகரித்துள்ளது. பலரும் அடுக்குமாடி வீடுகள் கட்டி, வாடகைக்கு விடுகின்றனர்.
- நமது நிருபர் -