கல்வான் தாக்குதல் போல மீண்டும் நிகழாது: ராணுவ தளபதி திட்டவட்டம்
கல்வான் தாக்குதல் போல மீண்டும் நிகழாது: ராணுவ தளபதி திட்டவட்டம்
ADDED : ஜன 16, 2025 12:27 AM

புனே,: ''எல்லையில் கல்வான் தாக்குதலைப் போல் மீண்டும் ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கும் வகையில் நம் ராணுவம் தயார் நிலையில் உள்ளது,'' என, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
கடந்த 1949ம் ஆண்டு ஜன., 15ல் சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு பின், ராணுவத்தின் கட்டுப்பாடு நம் வசம் ஒப்படைக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும், ஜன., 15ம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
டில்லியில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த ராணுவ தினம், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் 77வது ராணுவ தினம், மஹாராஷ்டிராவின் புனேவில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காட்கியில் உள்ள ராணுவ மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வீர, தீர செயல்கள் மற்றும் சாதனை புரிந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கி அவர் கவுரவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஊடுருவலுக்கான முயற்சிகள் தொடர்கின்றன. இருப்பினும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க ராணுவம் தயாராக உள்ளது.
எனவே தான், வடக்கு எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலைப் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதில் நம் படைகள் உறுதியாக உள்ளன.
ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினரின் தொடர் முயற்சியால், அங்கு வன்முறைகளும், ஊடுருவலும் குறைந்துள்ளன.
எதிர்காலத்தில் நம் ராணுவத்தை நவீன, சுறுசுறுப்பான, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் திறமையான படையாக மாற்றுவதற்கான பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராணுவ தின நிகழ்ச்சியில் நடந்த அணிவகுப்பில், பெண் ராணுவ போலீசாரின் அக்னி வீரர் படைப்பிரிவு, முதன்முறையாக பங்கேற்றது.
அதேபோல், மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸ் முதல் அதிகபட்சமாக 55 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையில் பயணிக்கக் கூடிய, 'மல்டி யுடிலிட்டி லெக்ட் கருவிகள்' எனப்படும் நாய் வடிவிலான ரோபோக்கள் அணிவகுப்பில் சிறப்பு கவனம் பெற்றன.