சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாட்டம் வீடியோ வெளியானதால் அரசு அதிர்ச்சி
சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாட்டம் வீடியோ வெளியானதால் அரசு அதிர்ச்சி
ADDED : ஜன 06, 2024 12:00 AM
லூதியானா:பஞ்சாப் மாநிலத்தில், சிறைக்குள் கைதிகள் பிறந்த நாள் கொண்டாடியது குறித்து வெளியான 'வீடியோ' குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, லுாதியானா மத்திய சிறைக்குள், கைதிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.
மேலும், பிறந்த நாள் கைதியான அருண் குமார் என்பவரை வாழ்த்தி, மற்ற கைதிகள் பாட்டுப்பாடி நடனம் ஆடினர். ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.
இந்தக் காட்சிகள், சமூக வலைதளங்களில் நேற்று முன் தினம் பரவின. இது, சிறைத்துறை மற்றும் போலீஸ் துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக சிறைக்குள் அதிரடி ஆய்வு நடத்திய போலீசார், ராணா என்ற கைதியிடம் இருந்து வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, ராணா மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 கைதிகள் மீது, சிறைத்துறை சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, சிறைத்துறை ஐ.ஜி., ஆர்.கே.அரோரா மற்றும் பாட்டியாலா டி.ஐ.ஜி., சுரீந்தர் சிங் சைனி ஆகியோருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
'பஞ்சாப் மாநிலத்தில் குற்றவாளிகள் சிறைகளுக்குள் இருந்தே பல குற்றங்களை செய்து வருகின்றனர். எனவே, சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கடந்த ஆண்டே கூறியிருந்தார்.