ADDED : ஜன 22, 2025 11:27 PM

கர்நாடகாவின் மலைநாடு மாவட்டம் என்று ஷிவமொக்கா அழைக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கீழ் ஷிவமொக்கா மாவட்டத்தின் சாகர், ஆகும்பே உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. இதில் சாகரில் உள்ள அம்பரகுட்டா என்ற மலை 620 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பச்சை பசேலென காட்சி அளிக்கிறது.
இந்த மலை, ஷராவதி நீர்த்தேக்க பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாகவும், லிங்கனமக்கி நீர் மின் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது.
இந்த மலைத் தொடரில் இருந்து ஷராவதி ஆற்றின் ஐந்து கிளை ஆறுகள் பிறக்கின்றன. அம்பரகுட்டா மலைக்கு செல்லும் பாதை கரடு முரடாக இருந்தாலும் அந்தப் பாதையில் பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கும்.
மலை முகட்டின் மேல் நின்று எதிர் திசையில் பசுமை போர்த்திய மலைகளை பார்க்கும்போது கண்களுக்கு விருந்தாக அமையும். அந்த இடத்தை விட்டு திரும்பி வர மனம் இருக்காது.இந்த மலையின் அடிவாரத்தில் காடுகளை மட்டுமே நம்பி உயிர் வாழும் குணாதி பழங்குடியினத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களை சந்தித்து பேசவும் வாய்ப்பு உண்டு.
அம்பரகுட்டாவில் இருந்து உடுப்பி கொல்லுார் 15 கி.மீ., தொலைவில் தான் அமைந்துள்ளது.
இதனால் அங்குள்ள மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்துவிடலாம். பெங்களூரில் இருந்து சாகர் 377 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பஸ், ரயில் வசதியும் உண்டு.
-- -நமது நிருபர் --

