விரைவில் ஓய்வு பெறுவதால் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எடுத்த முக்கிய முடிவு
விரைவில் ஓய்வு பெறுவதால் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எடுத்த முக்கிய முடிவு
ADDED : அக் 23, 2024 09:52 PM

புதுடில்லி: திருமணத்துக்கு பின், மனைவியின் சம்மதம் இன்றி அவருடன் பலவந்தமாக கணவன் உறவு கொள்வதை குற்றமாக கருத வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி விலகிக் கொண்டார். விரைவில் அவர் ஓய்வு பெற உள்ளதால், இந்த முடிவை அவர் எடுத்து உள்ளார்.
திருமணத்துக்கு பின் மனைவியின் சம்மதம் இன்றி அவருடன் பலவந்தமாக கணவன் உறவு கொள்வதை குற்றமாக கருத வேண்டும் எனக்கூறி டில்லி ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை 2022ல் ஐகோர்ட் பிறப்பித்தது. இதை தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது.
இதனை தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், '' மனைவியை பலவந்தப்படுத்தி கணவன் உறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது. மனைவியின் சம்மதத்தை மீறி, கணவனுக்கு உரிமை இல்லை என்றாலும், அதை பாலியல் பலாத்காரமாக கருதுவது மிகவும் கடுமையானது'' எனக்கூறியிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்த டி.ஓய்.சந்திரசூட், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார். நவ.,10 ல் அவர் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்தார். இந்த வழக்கை புதிய அமர்வு விசாரணை நடத்தும். அடுத்து இந்த வழக்கு நவ.,17 ல் விசாரணைக்கு வர உள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தனது வாதத்தை முன்வைக்க நிறைவு செய்ய ஒரு நாள் முழுதும் தேவை என்றனர்.
இதே போல் மற்ற வழக்கறிஞர்களும் இதே கோரிக்கையை வைத்தனர். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் அவ்வாறே கூறினார்.