UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 06:52 PM

பறந்து வந்தார் மணமகன்
பாட்டியின் ஆசை நிறைவேற்றம்
‘திருமணத்துக்கு தன் பேரன் ஹெலிகாப்டரில் வந்திறங்கினால் எப்படியிருக்கும்’ என, பல்லாண்டுகளாக கனவு கண்டார் பாட்டி. அதை தன் பேரனிடம் சொல்லிச் சொல்லி வளர்த்தார். அந்த ஆசையை மனதில் வைத்திருந்த பேரன் ஹீரா ராணா, தன் திருமண நாள் வந்ததும் அதை நிறைவேற்றிக்காட்டினார்.
உ.பி., மீரட்டைச் சேர்ந்த ஹீரா ராணா, ஹாபூரின் தெஹ்ரா கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கினார். திருமணம் முடிந்தவுடன், மணப்பெண்ணுடன் மீண்டும் ஹெலிகாப்டரில் சொந்த ஊர் வந்தார். ஊர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்த ஹெலிகாப்டர் பயணம், வலைதளங்களில் பரவி வருகிறது.
‘மைக்ரோசாப்ட்’ தள்ளாட்டம்
‘மீம்’ பிரியர்கள் கொண்டாட்டம்
‘மைக்ரோசாப்ட் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365’ ஆகியவை உலகம் முழுவதும் செயல் இழந்ததால் வேலையின்றி இருந்த பலரும், மீம் படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு கொண்டாடினர். பல மணி நேரம் காத்திருப்புக்கு புகழ் பெற்ற, ‘மிஸ்டர் பீன்’ படங்கள் அதிக மீம்களில் இடம் பெற்றிருந்தன. வேலை செய்யாத கம்ப்யூட்டரை தட்டிப்பார்த்து உடைப்பது போல வெளியான வீடியோக்கள் ஏராளம். வேலை இல்லாத ஊழியர்கள், அலுவலகங்களில் ஓடிப்பிடித்து விளையாடுவது, பொம்மை துப்பாக்கியால் சுட்டு சுட்டு விளையாடுவது போன்ற வீடியோவும் வைரல் ஆகின. ‘ஒண்ணும் அவசரம் இல்லை, மெதுவா செய்யுங்க’ என்று மைக்ரோசாப்ட் பழுதுநீக்கும் ஊழியர்களை பார்த்து சொல்வது போலவும் மீம்கள் பரவுகின்றன.
அட்லாண்டிக் கடலில் போனாலும்
அபராதம் செலுத்தியே ஆகணுமா?
உ.பி., யமுனா விரைவுச்சாலையில் தார் வாகனத்தில் சென்ற அனுஜீத் சிவத்துக்கு, போக்குவரத்து விதிமீறலுக்காக, 2,000 ரூபாய் அபராதம் விதித்து சலான் வந்தது. அந்த சாலையில், மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லலாம். அவர், 101 கி.மீ., வேகத்தில் சென்றதாக சலானில் இருந்தது. ‘வாகனம் சென்ற லோகேஷனை காட்டும் அட்சரேகை, தீர்க்க ரேகை, அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கிறது’ என்று கூறி, தன் சலானை, ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார் அனுஜீத் சிவம். எல்லாம் கோளாறு என்பது அவரது புகார். வலைதள பிரியர்கள், ‘ஜி.பி.எஸ்., சிக்னல் இல்லாவிட்டால், அட்லாண்டிக் கடல் தான் காட்டும். அனுமதிக்கப்பட்ட விதிமீறல் சதவீத எல்லைக்குள் தான் உங்கள் வேகம் இருக்கிறது. அபராதம் செலுத்த தேவையில்லை’ என்கின்றனர்.
வலைதளங்களை வென்றார்
6 வயது ஜார்ஜியா சிறுமி
ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த, 6 வயது சிறுமி ஈவா அனாமரியா. ஷாருக் கான் – கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்கானியா லெ ஜெயங்கே படத்தின், ‘டோலி சஜா கே ரக்னா’ பாடலுக்கு சிறுமி ஆடிய சூப்பர் டான்ஸ் வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. நான்கரை கோடி பேர் பார்வையிட்டுள்ள அந்த வீடியோவில், இதுவரை வலைதளவாசிகள், 66 ஆயிரம் பேர், ‘கமென்ட்’ செய்து சிறுமியை பாராட்டி உள்ளனர். சிறுமியின் ஒவ்வொரு வீடியோவும், 10 லட்சம் பார்வைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ராக்ஸ்டாராக சிறுமி உருவெடுத்துள்ளார் என்கின்றனர், வலைதளவாசிகள்.
பார்வையாளர்களை கவர்ந்த
முதல்வரின் ‘சக ஊழியர்’
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, துரா நகரில் அவரது வீட்டில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். சிறுவனான அவரது மகனும் மேடையில் இருந்தான். முதல்வர் பேசிக் கொண்டிருந்த போது, கை தட்டியபடி அங்குமிங்கும் ஓடி ஆடினான் சிறுவன். அதை கண்ட பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். மகனை துரத்திப் பிடித்த முதல்வர் சங்மா, பார்வையாளர்களுக்கு, ‘பை’ சொல்ல வைத்து, குடும்பத்தினரிடம் அனுப்பினார். வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த முதல்வர் சங்மா, ‘என் வீட்டில் நடந்த விழாவில், ‘சக ஊழியர்’ ஒருவரும் என்னுடன் பங்கேற்றார்’ என, நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.
