ADDED : நவ 28, 2026 02:12 AM

தாஜ் மஹால் வளாகத்தில்
குரங்குகள் கும்மாளம்
உ.பி.,யின் ஆக்ராவில், தாஜ் மஹாலை காண தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணியர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் மாபெரும் பிரச்னை, அங்கு சுற்றித்திரியும் நுாற்றுக்கணக்கான குரங்குகள்தான். அவை, சுற்றுலா வருபவர்களிடம் பொருட்களை பறித்துச் செல்கின்றன; தாக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. தீர்வுக்கு என்ன செய்வதென அதிகாரிகளுக்கு தெரியவில்லை. குரங்குகளை பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய் விடும் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. நுாற்றுக்கணக்கான குரங்குகள் படையெடுத்து வரும் வீடியோவை பார்த்த வலைதளவாசிகள், கேலி, கிண்டலாக கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
அச்சத்தை ஏற்படுத்தியது
மெகா சைஸ் தோசை
தெலுங்கானாவின் ஹைதராபாத் வந்த வெளிநாட்டவர் ஒருவர், டைனிங் டேபிளில் இருந்த நீளமான தோசையை கண்டு ஆச்சரியம் அடையும் வீடியோ, பரவி வருகிறது. சமூக வலைதள பிரபலம் ஸ்ரீலயாவும், தோழிகளும், உணவகத்தில் சாப்பிட அமர்ந்துள்ளனர். அவர்கள் முன், மொத்த டேபிள் நீளத்துக்கும் ஒரே நீ....ண்ட தோசை பரிமாறப்பட்டுள்ளது. வெளிநாட்டவர், நீண்ட நெடிய மெகா தோசையை கண்டதும், கண்கள் அகல விரிந்தபடி காட்டும் முகபாவனை, வலைதளவாசிகளை கவர்ந்தது. ‘அது 70 எம்.எம். தோசை’ என்று ஒருவரும், ‘பாகுபலி தோசை’ என்று இன்னொருவரும், ‘அவரது கண்களில் பயம் தெரிகிறது’ என மூன்றாமவரும் கமென்ட் செய்துள்ளனர்.
தந்தைக்கு இறுதிச்சடங்கு
டில்லியில் கதறிய மகன்
‘ஸ்பைஸ்ஜெட்’ விமானம் தாமதம், ரத்து என்ற செய்திகளால் பயணியர் அவதிக்கு ஆளாவது தொடர்கிறது. தந்தையின் இறுதிச் சடங்குக்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த இளைஞர் ஒருவர், பாட்னா செல்லும் விமானம் தாமதம் ஆவதால் கண்ணீர் விட்டு கதறிய காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. அவரை சுட்டிக்காட்டிய டில்லி பல்கலை மாணவர் சங்க தலைவர் யாஷ் தபாஸ், ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். ‘விமானம் இயக்க முடியாத நிலை இருந்தால் ஏன் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்’ என்றும் அவர் கேட்டார். வலைதளவாசிகள் பலரும், ‘அவரது கேள்வி நியாயமானது தான்’ என்று பதிவிடுகின்றனர்.
ரஷ்ய அதிபருடன் செல்பி
கேரள சிறுவன் மகிழ்ச்சி
இந்தியாவின் ‘ஏஐ’ சிறுவன் என்று புகழ் பெற்ற, கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் ரால் ஜான் அஜூ ரஷ்யா சென்றிருந்தான். இந்த சிறுவன், சொந்தமாக ஒரு ‘ஏஐ’ நிறுவனம் நடத்தி வருகிறான். மாஸ்கோவில் ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் மாநாட்டுக்கு சென்ற சிறுவனை, அதை தொடங்கி வைக்க வந்த அந்நாட்டு அதிபர் புடின் சந்தித்தார். அவருடன் சிறுவன் செல்பி எடுத்துக் கொண்டான். ‘இது ஒன்றும் ஏஐ இல்லை’ என்ற பதிவுடன் அஜூ வெளியிட்ட புடின் செல்பி படம், வலைதளங்களில் பரவி வருகிறது.
ரயில் பயணம் பிரமாதம்
பிரிட்டன் பயணி பாராட்டு
இந்தியா வந்த பிரிட்டன் சுற்றுலாப்பயணி டோமினிக், மும்பையில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு ரயிலில் பயணித்தார். ‘29 மணி நேர ரயில் பயணம். டிக்கெட் கட்டணம் 5,461 ரூபாய். ரயிலின் நேரம் தவறாமை என்னை ஆச்சர்யப்படுத்தியது’ என்கிறார் டோமினிக். ‘ரயிலில் வழங்கிய உணவு அற்புதமாக இருந்தது. செலவும் குறைவு. மும்பை மெட்ரோ பிரமாதம். மோனோ ரயிலும் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் பொது போக்குவரத்து என்னை மிகவும் கவர்ந்தது. புகார்கள் எதுவும் இல்லை’ என்று கூறும் அவரது பதிவு வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஊழியர் அலட்சியம்
ரயில்வே மீது புகார்
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் டிக்கெட் வாங்கச் சென்ற பயணி நீல் ஹரியா, ரயில்வே பணியாளர் கூடுதல் தொகை கேட்டதாகவும், பயணியருக்கு முக்கியத்துவம் தராமல் மொபைல் போனில் மூழ்கி இருந்ததாகவும் புகார் கிளப்பினார். ‘மற்ற பணியாளர்களும் வேலை செய்யாமல், விளையாடி பொழுதைக் கழித்தனர். ஸ்டேஷன் மாஸ்டர் பொறுப்பின்றி இருந்தார்’ என்றும் குற்றம் சாட்டினார். எக்ஸ் தளத்தில் இந்த புகாரை கவனித்த ‘ரயில்வே சேவா’ தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. வலைதளவாசிகள், ‘இதேபோன்ற புகார்களை இதற்கு முன் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று வருத்தப்பட்டனர்.
