கோவிலில் சட்டையை கழற்றும் விவகாரம்: மீண்டும் சர்ச்சை
கோவிலில் சட்டையை கழற்றும் விவகாரம்: மீண்டும் சர்ச்சை
ADDED : ஜன 04, 2025 12:51 AM

திருவனந்தபுரம்:  “கோவில்களின் உள்ளே ஆண் பக்தர்களின் மேல் சட்டையை கழற்றும் விவகாரம் தொடர்பான சர்ச்சை ஹிந்துக்களின் ஒற்றுமையை பாதிக்கக்கூடாது,” என, ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் பொதுச் செயலர் வெல்லப்பள்ளி நடேசன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், பெரும்பாலான கோவில்களுக்கு செல்லும் ஆண் பக்தர்கள், மேல் சட்டையை கழற்றும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அங்குள்ள நாராயண குருவின் சிவகிரி மடத்தில், சமீபத்தில் சிவகிரி யாத்திரை மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்ற சுவாமி சச்சிதானந்தா, 'கோவில்களுக்கு செல்லும் ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணியக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. அந்த முறை கைவிடப்பட்ட வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தை முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார். 'மாறி வரும் காலத்துக்கேற்ப இது போன்ற நடைமுறைகளை தவிர்க்கலாம்' என அவர் தெரிவித்திருந்தார்.
இது, கேரள கோவில் நிர்வாகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலர் வெல்லப்பள்ளி நடேசன் கூறியதாவது:
ஹிந்துக்களிடையே உள்ள பல பிரிவினர், பல்வேறு பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். கோவில்களில் ஆண்கள் மேல் சட்டையை கழற்றுவது போன்ற பிரச்னைகள் அவர்களிடையே பிரிவினையை உருவாக்கக் கூடாது.
சுவாமி சச்சிதானந்தா கூறியதில் தவறேதும் இல்லை. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் கீழ் செயல்படும் கோவில்களில், ஆண்கள் மேல்சட்டை அணிய அனுமதிக்கப்படுகிறது.
சில கோவில்களில் வெவ்வெறு நடைமுறைகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஒரே நாளில் அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சுவாமி சச்சிதானந்தாவின் கருத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்தற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், “பல்வேறு கோவில்களில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களில், சரியான நேரத்தில் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
“அனைத்து பிரிவுகளுடனும் விவாதிக்காமல், இந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வர முடியாது,” என்றார்.

