சிறப்பு மருத்துவர்கள் இல்லாத அவலம் தங்கவயல் ரூபகலா சட்டசபையில் வேதனை
சிறப்பு மருத்துவர்கள் இல்லாத அவலம் தங்கவயல் ரூபகலா சட்டசபையில் வேதனை
ADDED : டிச 20, 2024 05:39 AM

பெலகாவி: ''தங்கவயல் அரசு மருத்துவமனையில் கட்டடம் உட்பட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை,'' என்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா குற்றம் சாட்டினார்.
பெலகாவியில் நடந்து வரும் சட்டசபை கூட்டத் தொடரில், நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அவர் பேசியதாவது:
தங்கவயலில் பிரிட்டிஷ்காரர்கள் ஆதிக்கம் இருந்த போது உருவாக்கப்பட்டது மருத்துவமனை. இதனை மைசூரு மகாராஜா திறந்து வைத்தார். இதற்கு வரலாறு உண்டு.
தங்கவயல் நகரப் பகுதியில் 2.50 லட்சம் பேரும், கிராம பகுதிகளில் 1.20 லட்சம் பேரும் உள்ளனர். தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், மருத்துவ வசதிக்காக, அரசு மருத்துவமனைக்கு தான் வருகின்றனர்.
பல ஆயிரம் அடிகள் பாதாளம் சென்று உழைத்தவர்களுக்கு சிலிகாசிஸ், சுவாச கோளாறு ஏற்பட்டு உள்ளது. அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நோய் தடுப்புக்கு ஏற்ற சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும்.
முந்தைய அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சிவானந்த பாட்டீலிடம் தெரிவித்து, தங்கவயல் அரசு மருத்துவமனை யில் புதிய கட்டடம், உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த 8 கோடி ரூபாய் நிதி பெற்றேன். புற நோயாளிகள் பிரிவு, ஐ.சி.யு., பிளாக், இதய சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டது.
தங்கவயல், தாலுகா தகுதி பெற்றும், உள் கட்டமைப்பு வசதிகள் இருந்தும், மருத்துவமனையில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. மாரடைப்பு ஏற்பட்டால் கோலார் அல்லது பெங்களூரு செல்ல வேண்டும். இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் இல்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகப்பேறு மருத்துவமனையில் தேவையான மருத்துவ வசதி அவசியம் தேவை. தாயில்லாமல் குழந்தையை யார் காப்பாற்ற முடியும். கர்ப்பிணியரை மருத்துவ ரீதியாக கவனிக்க வேண்டும்.
எந்த அரசு மீதும் அவதுாறு கூறவில்லை. ஏழைகள் நிறைந்த எனது தொகுதியில் மருத்துவ வசதி தேவை. கொரோனா நேரத்தில் அதன் கஷ்டங்களை நேரில் கவனித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.