சட்டத்தை மாற்ற முடியாது பிரஜ்வலுக்கு ஐகோர்ட் 'குட்டு'
சட்டத்தை மாற்ற முடியாது பிரஜ்வலுக்கு ஐகோர்ட் 'குட்டு'
ADDED : ஜன 17, 2025 07:12 AM
பெங்களூரு: உங்களுக்காக சட்டத்தை மாற்ற முடியாது என்று கூறி, பாலியல் வழக்கில் கைதான முன்னாள் எம்.பி., பிரஜ்வல் தலையில், உயர் நீதிமன்றம் குட்டி உள்ளது.
பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல், தனது டிரைவரிடம் இருந்து போலீசார் பெற்ற ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை தங்களிடம் தரும்படி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்தார்.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஜெகதீஷ் வாதாடுகையில், ''நீதிமன்றம் உத்தரவிட்டால் மனுதாரருக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வழங்கப்படும். ஆனால் அது பெண்களின் தனி உரிமையை பாதிக்கும். விசாரணை நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே இது போன்ற விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதனால் எக்காரணம் கொண்டும் புகைப்படங்கள், வீடியோக்களை வழங்கக் கூடாது,'' என்றார்.
பிரஜ்வல் வக்கீல் அருண் வாதாடுகையில், ''ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை தரும்படி நாங்கள் கேட்கவில்லை. தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் எத்தனை ஆபாச படங்கள் இருந்தன என்பதை அரசு குறிப்பிடவில்லை.
''எனது மனுதாரரின் முன்னாள் கார் ஓட்டுனரின் மொபைல் போன் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது:
ஆபாசத்திற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தையும் கடந்து விட்டது. பெண்களின் தனி உரிமையை மீறும் வீடியோ, புகைப்படங்கள் எதுவும் கொடுக்க முடியாது. வழக்கில் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பெண்ணின் தனி உரிமை மீறுவதை அனுமதிக்க முடியாது.
வேறொருவரின் தனி உரிமையை மீறும் படங்களை ஏன் கேட்கிறீர்கள். இந்த வழக்கில் தொடர்பு உடையவர் பிரஜ்வல் ரேவண்ணா என்பதால் சட்டத்தை மாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.