85:85:85 தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி
85:85:85 தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி
ADDED : அக் 24, 2024 12:59 AM
மும்பை,மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை, எதிர்க்கட்சி கூட்டணியான, 'மஹா விகாஸ் அகாடி' இறுதி செய்தது. இதன்படி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்., - சரத் பவாரின் தேசியவாத காங்., தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. 288 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, நவ., 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; நவ., 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - காங்., - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி கூட்டணி இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலில், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பிரிவு, காங்., - தேசியவாத காங்., சரத்பவார் பிரிவு ஆகியவை, தலா 85 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன. இது குறித்த அறிவிப்பை, உத்தவ் தாக்கரே தரப்பு மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மாநில காங்., தலைவர் நானா படோல் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் சஞ்சய் ராவத் கூறியதாவது:
சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை, மஹா விகாஸ் கூட்டணி இறுதி செய்துள்ளது. இதன்படி, சிவசேனா, காங்., - தேசியவாத காங்., தலா 85 தொகுதிகளில் போட்டியிடும்.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 255ல் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.
இதன்பின் தொகுதிகள் மீதமிருந்தால், அவற்றை நாங்கள் சமமாக பங்கிட்டுக் கொள்வோம். தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. பா.ஜ.,வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.