ADDED : நவ 13, 2024 10:57 PM
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்க்காடு, தெங்கரை வன எல்லைப்பகுதியில், மெழுகுப்பாறை என்ற இடத்தில், தனியாருக்கு சொந்தமான தோப்பு அருகே தாய் யானையும், குட்டி யானையும் இறந்து கிடந்தன.
நேற்று முன்தினம் மாலை அங்கு விறகு சேகரிக்கச் சென்ற பழங்குடியினர், யானைகள் இறந்து கிடப்பதைக் கண்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மன்னார்க்காடு கோட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து, வன அலுவலர் அப்துல் லத்தீப் கூறியதாவது:
பலியான தாய் யானைக்கு 16 வயதும், குட்டியானைக்கு மூன்று மாதமும் இருக்கும். வனத்துறையின் கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தலைமையில் நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. கால் தவறி பள்ளத்தில் விழுந்து அடிபட்டதால், யானைகள் இறந்ததாக தெரிகிறது.
அதற்கான அறிகுறிகளும், அடையாளங்களும் உடலில் உள்ளன. யானைகள் இறந்து மூன்று நாட்கள் இருக்கும். வனத்தில் யானைகள் உடல் அடக்கம் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.