பனாமாவில் ஹோட்டலில் இந்தியர்கள்: பாதுகாப்பாக இருப்பதாக துாதரகம் உறுதி
பனாமாவில் ஹோட்டலில் இந்தியர்கள்: பாதுகாப்பாக இருப்பதாக துாதரகம் உறுதி
UPDATED : பிப் 20, 2025 09:01 PM
ADDED : பிப் 20, 2025 08:59 PM

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக பனாமாவுக்கான இந்திய துாதரகம் உறுதிபடுத்தியுள்ளது.
தங்கள் நாட்டின் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வரும் அமெரிக்கா, இப்போது புதிய வழிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளது. முதலில் அவரவர் நாட்டுக்கே நேரடியாக ராணுவ விமானங்களில் கொண்டு சென்று இறக்கி விட்ட அமெரிக்கா, அப்போது பனாமா நாட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறது.
அங்கிருந்து அவர்களை, அவரவர் சொந்த நாட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பனாமா நாட்டின் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர், ஹோட்டல் ஜன்னல் வழியாக உதவி கோரிய வீடியோ வெளியாகிய நிலையில் இந்திய துாதரகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'நாடு கடத்தப்பட்டவர்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளனர். அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நாங்கள் அரசுடன் பணியாற்றி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளது.

