காங்கிரசுக்கு அடுத்த சவால் ; 4 எம்.எல்.சி., பதவிக்கு போட்டி
காங்கிரசுக்கு அடுத்த சவால் ; 4 எம்.எல்.சி., பதவிக்கு போட்டி
ADDED : நவ 27, 2024 05:09 AM
கர்நாடகாவில் நடந்து முடிந்த மூன்று சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள், அடுத்த தலைவலியை சமாளிக்க தயாராகி வருகின்றனர்.
சென்னப்பட்டணா, ஷிகாவி, சண்டூர் - தனி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், மூன்றையும் காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாமல், காங்கிரஸ் தலைவர்கள், அடுத்த சவாலுக்கு தயாராகி வருகின்றனர்.
கர்நாடக மேலவையில் தலைவர் உட்பட மொத்தம் 75 இடங்கள். இதில், காங்கிரஸ் 33, பா.ஜ., 29, ம.ஜ.த., 8, சுயேச்சை ஒன்று, காலி இடங்கள் 2 என இருந்தது. சென்னப்பட்டணா சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வில் இருந்து விலகிய யோகேஸ்வர், தன் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின், காங்கிரசில் இணைந்த யோகேஸ்வர், 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே, நியமன உறுப்பினர்களில் காங்கிரசின் பிரகாஷ் ராத்தோட், வெங்கடேஷ் ஆகியோர் பதவி காலம் முடிவடைந்து காலியாக உள்ளன. தற்போது, யோகேஸ்வரின் ராஜினாமாவை அடுத்து, கர்நாடக மேலவையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும், ஜனவரி மாதத்தில் ம.ஜ.த.,வின் திப்பேசாமியின் பதவி காலம் முடிவடைகிறது.
இந்த நான்கு இடங்களில் தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று 'காட்பாதர்'களை, கட்சியினர் சுற்றி வருகின்றனர். தற்போது இப்பதவியில் போட்டியிட பிரகாஷ் ராத்தோட், வெங்கடேஷ், உக்ரப்பா, துவாரகநாத், பாலராஜ நாயகா, சங்கர், வினய் கார்த்திக், நடராஜ் கவுடா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
அதேவேளையில், பிரகாஷ் ராத்தோட் இரண்டு முறை எம்.எல்.சி.,யாக பதவி வகித்துள்ளார். மூன்றாவது முறையும் அவரையே நிறுத்த கட்சி யோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மல்லிகார்ஜுன கார்கேயின் ஆதரவாளரான வெங்கடேஷ், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பசவனகுடி தொகுதியில் போட்டியிட அனுமதித்தது.
ஆனால், அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். எனவே, மீண்டும் எம்.எல்.சி.,க்கு அவரது பெயரை கார்கே பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நான்கு இடங்களில், தங்களின் ஆதரவாளர்களை நியமிக்க, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், திரைமறைவில் காய் நகர்த்தி வருகின்றனர். சிலர், தங்களுக்கு வாய்ப்பு கேட்டு, புதுடில்லியில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
அடுத்த மாதம் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில், வேட்பாளர் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கலாம் என ஆலோசித்து வருகின்றனர்.
- நமது நிருபர் -

