தானாக பதவி விலகுவதுதான் ஒரே வழி: நீதிபதி வர்மாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
தானாக பதவி விலகுவதுதான் ஒரே வழி: நீதிபதி வர்மாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
ADDED : ஆக 14, 2025 12:48 AM

புதுடில்லி: பண மூட்டை சிக்கிய விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விசாரணை குழுவை அமைத்துள்ளார்.
எனவே, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை பெற வேண்டுமெனில், யஷ்வந்த் வர்மா, அவராகவே தன் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள் விசாரணை குழு
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது, அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும்போது பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து விசாரிக்க, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, உள் விசாரணை குழுவை அமைத்தார்.
இக்குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், 'நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்கலாம்' என ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரையை எதிர்த்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை, சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, பார்லிமென்டில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
லோக்சபா நேற்று முன்தினம் கூடியபோது, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி 146 எம்.பி.,க்களிடம் இருந்து வந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
ஒப்புதல் தேவையில்லை
மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவையும் சபாநாயகர் அமைத்தார்.
இதனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பார்லிமென்ட் நடவடிக்கை எடுப்பதற்கு முன், தானாகவே பதவியை அவர் ராஜினாமா செய்தால் மட்டுமே ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் பிற பலன்களை பெற முடியும்.
ஒருவேளை பார்லிமென்ட் மூலம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதியம் உள்பட எந்தவொரு சலுகையும் அவருக்கு கிடைக்காது என கூறப்படுகிறது.
அரசியல்சாசன பிரிவு 217ன் படி ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி அவராகவே தன் கைப்பட ராஜினாமா கடிதம் எழுதி, ஜனாதிபதிக்கு அனுப்பினாலே அது ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கு எந்த ஒப்புதலும் தேவையில்லை என கூறப்படுகிறது.