தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!

இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!

இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!


UPDATED : நவ 28, 2026 12:06 AM

ADDED : நவ 28, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:06 AM ADDED : நவ 28, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

– சிறப்பு நிருபர் –

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்றே தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மதுரை கலெக்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நிராகரித்த நீதிபதிகள், கோவிலின் அறங்காவலர் குழுவையும் தற்காலிகமாக கலைக்க உத்தரவிட்டனர். தமிழக தலைமை செயலர், டி.ஜி.பி., உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது.

இடைக்கால மனு



இதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை 20ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இந்த ஆண்டு மட்டும் நவம்பர் 24-ம் தேதி, தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 24ம் தேதி தீபம் ஏற்றப்படாததால், மதுரை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்களும், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், நீதி பதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

பிரதான மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரிக்கப் போவதில்லை என்றும், கடந்த 20ம் தேதி பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாதது குறித்து மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கில் ஆஜரான வக்கீல் களின் வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, எங்கள் மனதில் முதலில் தோன்றுவது, ‘ஐயோ’ என்ற வார்த்தையே. மிகுந்த வேதனையுடனும் மனத்துயரத்துடனும் இதை தெரிவிக்கிறோம்.

இத்தகைய சூழல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய நேரம் வந்து விட்டது; இல்லையெனில், அது அரசியலமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பது பேச்சுக்கான அழைப்பு அல்ல. அரசியலமைப்பு பிரிவு, 144-ன் கீழ் அனைத்து அதிகாரிகளும் நீதிமன்றத்திற்கு துணை நிற்க வேண்டும். தமிழகத்தில், குறிப்பாக மதுரையில் ஒரு நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுகள் இப்படி மெத்தனமாக கையாளப்படும் போது, நாங்கள் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடே உயர்ந்தது. குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்ய, மனப்பூர்வமாகத் தீர்மானித்துள்ளதன் வரையறைகளை அரசியலமைப்பின் முகப்புரை பிரதிபலிக்கிறது.

எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும், நீதித்துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்படாது என்ற செய்தியையே, இந்த உத்தரவின் மூலம் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.

அதிகாரம்



இந்த நீதிமன்றமே ஒரு உத்தரவை மாற்றும் வரை, அதன் உத்தரவு மீறப்படும் போது, எங்களால் செயலற்று அமர்ந்திருக்க முடியாது.

இந்திய அரசியலமைப்பின் 129-வது பிரிவின் கீழ், ஒரு ஆவண நீதிமன்றமாக உள்ள இந்த நீதிமன்றம், சட்டத்தின் மாண்பிற்கு பங்கம் ஏற்படும் போது நீதியை நிலைநாட்டப் போதுமான அதிகாரத்தைக் கொண்டு உள்ளது.

இத்தகைய நிகழ்வு களுக்காகவே, நீதி நிர்வாகம் எந்தவொரு அதிகாரத்திற்கும் தலைவணங்காது என்ற வாக்குறுதியை

தொடர்ச்சி 18ம் பக்கம்

இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!

5ம் பக்கத் தொடர்ச்சி

விதைத்து, நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், 1971-ம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அரசியலமைப்பு நீதிமன்றங்களின் கைகளில் உள்ள ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும்.

முறையான நீதி நிர்வாகம் காலத்தின் கட்டாயமாக இருக்கும் இடங்களில் அதனைப் பயன்படுத்த நீதிமன்றம் ஒருபோதும் தயங்காது. இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு இருக்கக்கூடிய நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளும், நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாகவும், வேண்டும் என்றே மீறியதற்கான காரணங்களை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

.அறங்காவலர் குழு, இந்த நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தவறான மற்றும் சித்தரிக்கப்பட்ட விளக்கத்தை அளிப்பதன் மூலம் நீதிமன்ற உத்தரவுகளை மீற முயன்று உள்ளதோடு அதனை செயல்படுத்துவதற்கு வேண்டுமென்றே இடையூறு விளைவித்திருப்பதும் தெளிவாக தெரிகிறது. தீபம் ஏற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் கையொப்பமிட்ட தீர்மானம் ஒன்றை வாரியம் நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நீதிமன்றம் உத்தரவிட்டபடி தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவிற்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பதாக, அந்தத் தீர்மானத்தில் வாரியம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தத் தீர்மானத்தைக் காரணமாகக் காட்டி மாவட்ட கலெக்டர் தப்பிக்க முயற்சிக்கிறார். தகுந்த நேரத்தில் இவ்விவகாரத்தை நாங்கள் கையாள்வோம்.

பழியை கோவில் நிர்வாகத்தின் மீது சுமத்தி கலெக்டர் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கை, முதலைக் கண்ணீர் போன்றது , மாவட்ட மாஜிஸ்திரேட்டாக விரிவான அதிகாரம் கொண்ட கலெக்டரின் அறிக்கையை நிராகரிக்கிறோம். அந்த அறிக்கையானது, இந்த நீதிமன்றத்தின் முன் எடுத்துரைக்கப்பட்ட மரபுகளை நீதிமன்றம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்ற, தேவையற்ற உள்நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இடைக்கால உத்தரவை செயல்படுத்த வாரியம் மறுத்ததன் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது, இந்த அறிக்கை நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை மேலும் தீவிரப்படுத்துகிறது. மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் உள்ள கலெக்டர், இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில், அவரது அதிகாரங்கள் மிகவும் விரிவானவை; அவரது கைகள் மிக நீளமானவை. முதற்கட்ட அறிக்கையும் மன்னிப்பும் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை அதில் உள்ள விபரங்கள் பிரதிபலிக்கின்றனவா என்பதை நாங்கள் இன்னும் ஆராய வேண்டியிருப்பதால், இக்கட்டத்தில் முதற்கட்ட அறிக்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை.

கலெக்டரின் நிலைப்பாடு, ‘நீ செத்தது போல நடி, நான் அழுவது போல பாசாங்கு செய்கிறேன்’ என்ற பழமொழியையே நினைவூட்டுகிறது. கலெக்டரின் அறிக்கையை மேலோட்டமாகப் பார்க்கும் போது , முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை; மேலும் இது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கத் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், புள்ளிவிபர நோக்கங்களுக்காக மட்டுமே பதிவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 24ல், உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துச் சென்று, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும். அதிகாரிகள் அவமதிப்பைச் சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்காததால், நவம்பர் 20-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பின் மீதான இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது.

தகுந்த விதிமுறைகள் மற்றும் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலையில், ஒவ்வொரு பக்தரும் தீபம் ஏற்றவும் வழிபடவும் அனுமதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள முழு பகுதியையும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தர்காவின் அனைத்துப் பக்கங்களிலும் குறைந்தபட்சம், 164 அடி தொலைவில் தீபம் ஏற்ற வேண்டும்.

தர்காவைப் பாதுகாக்கவும், அங்கு வரும் பக்தர்கள் தொழுகை நடத்துவதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய ரிசர்வ் படைக்கு முழு சுதந்திரம் உள்ளது. தர்கா மற்றும் கோவில் பகுதியை வேறுபடுத்தும் விதமாக, அப்பகுதியில் வேலி அமைத்துக் கொள்ளலாம்.

நீதிமன்ற உத்தரவுக்கு தவறான விளக்கம் அளித்து இடையூறு விளைவித்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகத்தை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் கொண்ட தனிப் பொறுப்பாளர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு தலைமை செயலர் உள்ளிட்ட 13 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. மேலும், தமிழக தலைமை செயலர், டி.ஜி.பி., ஆகியோர் டிச., 15ல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இதற்கான நோட்டீஸ் மூன்று நாட்களுக்குள் வழங்கப்பட்டதை உறுதி செய்து, தலைமைச் செயலர் தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; தவறினால், இதற்கு அவர் நேரில் ஆஜராகும் போது விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிச., 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

‘தீபத்துாணில் தீபம் ஏற்ற அறநிலையத்துறை ஏற்பாடு செய்யவில்லை’

உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மனுதாரர்களான ராம ரவிக்குமார், கார்த்திகேயன், வி. ராமசுப்பு ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், சாய் தீபக், வள்ளியப்பன் ஆகியோர் முன்வைத்த வாதங்களின் விபரம்:

மதுரை மாவட்ட கலெக்டரின் செயல்பாடுகள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தை மையமாகக் கொண்டே இருந்துள்ளன. கடந்த, 25ம் தேதி கலெக்டர் தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையானது, அனைத்தையும் மூடி மறைப்பதற்கான திட்டமிட்ட செயல். புதிய இடத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று, அவர் காரணம் கூறுகிறார்.

ஆனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கும், கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. கடந்த, 20ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிலும் அறங்காவலர்களுக்கு சுயமாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான், திருப்பரங்குன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு அவசரமாக அமைக்கப்பட்டது.

இதில், ரெஜினா தேவி என்பவர் ஹிந்து மதத்தைச் சேராதவர்; மற்றொரு நபர் தீபதுாணில் தீபம் ஏற்றக்கூடாது என போராட்டம் நடத்தியவர். நீதிமன்ற உத்தரவை எதிர்ப்பவர்களாக பார்த்து இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அறங்காவலர் குழு உறுப்பினர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அறங்காவலர் குழுவின் தீர்மானத்தை எதையும் சரிபார்க்காமல் கலெக்டர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கோவில் ஸ்தானிகர்களோ, அறங்காவலர் குழுவின் முடிவு குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின், 25 மற்றும், 26-வது பிரிவுகளின் கீழ், மத உரிமைகள் இருப்பதாக அறங்காவலர்கள் கடைசி நேரத்தில் கூறுவது ஏற்புடையதல்ல; அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை எந்த உரிமையையும் கோரவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்து விட்டு, அதையே ஒரு காரணமாகக் காட்டி உத்தரவை நிறைவேற்றாமல் போனது, தமிழக அரசின் தந்திரமாகும். தீபத் திருநாளுக்கு முன்பே தமிழக அமைச்சர்கள் பலரும், ‘தீபத்துாணில் தீபம் ஏற்றப்படாது’ என்று பேசியுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா 11 நாட்கள் நடைபெறும் என்பதாலும், டிசம்பர், 15-ஆம் தேதி வரை கார்த்திகை மாதம் நீடிப்பதாலும், மரபின் அடிப்படையில் டிசம்பர், 15-க்குள் உடனடியாகத் தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

உச்சபட்ச வரம்பு மீறல்

தொல்லியல் துறை சார்பில் ஆஜரான, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதங்கள்:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழக அரசு நடந்து கொண்ட விதம் நிர்வாக துறையின் உச்சபட்ச வரம்பு மீறல்; மிகவும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்புச் செயல். தீர்ப்பைச் செயல்படுத்தாமல் போனவர்கள் மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தொல்லியல் துறை தயாராக இருந்தது. நவம்பர், 24 அன்று தொல்லியல் துறை அதிகாரிகள் தர்கா அருகே சென்ற போது, அங்கிருந்த போலீஸ் உயரதிகாரிகள் அதற்கு மேல் செல்ல அனுமதி மறுத்தனர்.

இதனால், தீபத்துாணை அடையவோ, நிலைமையை ஆய்வு செய்யவோ முடியவில்லை. ஹிந்து சமய அறநிலைய துறையோ அல்லது பிற துறைகளோ தீபம் ஏற்ற எந்த ஏற்பாடும் செய்யாததால், ஆய்வு செய்யாமலேயே தொல்லியல் துறையினர் திரும்பினர். இனி, இந்த விவகாரத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த விஷயத்திலும் தமிழக போலீசார் தலையிடக் கூடாது.

வெளியில் இருந்து சுதந்திரமான குழு ஒன்றை அமைத்து, அதன் கண்காணிப்பில் தீர்ப்பை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இது, தமிழகம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. இந்த நாடு சட்டத்தின் ஆட்சியின் கீழ் இயங்குகிறது என்பதை நிரூபிக்கும் வகையில், நீதிமன்ற நடவடிக்கை இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

* என் வேலை கிடையாது.

இதைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிட்டதாவது:

தீபம் ஏற்றப்படாததற்கான காரணத்தை உடனடியாகத் தெரிவிக்கவே முதற்கட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. நான் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுவேன் என்று தான் சொன்னேனே தவிர, அந்தக் குறிப்பிட்ட துாணில் தீபம் ஏற்றுவேன் என்று சொல்லவில்லை. தீபம் ஏற்றுவது எனது வேலை கிடையாது; எனது அதிகாரமும் அதற்குள் செல்லாது.

தொல்லியல் துறை அதிகாரிகளை தடுத்ததாகக் கூறுவது பொய். அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றதற்கான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி விட வேண்டும் என்பதற்காக, தீர்ப்பின் நகல் எங்கள் கைகளுக்கு கிடைப்பதற்கு முன்பாக இருந்தே அதற்கான வேலைகளை தொடங்கி விட்டோம்.

இது தொடர்பாக கடந்த, 20 முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட கூட்ட விபரங்கள், அதில் நடத்தப்பட்ட விவாதங்கள், முடிவுகள் என அனைத்து விபரங்களையும் வெளிப்படை தன்மையுடன் பிரமாண பத்திரமாக இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த காரணத்திற்காக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க முடியாது-.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த நீதிபதிகள், ‘நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் தான் மாவட்ட கலெக்டர். நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த வேண்டியது உங்கள் வேலை. இது மிகப்பெரிய அரசியலமைப்பு சிக்கலை உருவாக்கி விடும்’ என, காட்டமாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலைய துறை ஆணையர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “உச்ச நீதிமன்றம் அந்தக் குறிப்பிட்ட துாணில் தீபம் ஏற்ற அனுமதித்த விவகாரத்தில், வழக்கின் தகுதி அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கவில்லை. இதனால், மரபுகள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவில் சில தளர்வுகளை அறநிலையத்துறையும். அறங்காவலர் குழுவும் தானாகவே எடுப்பதற்கான வழிவகை உருவாகியதாகக் கருதப்பட்டது,” என்றார்.

கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா. “அறங்காவலர் குழு மத ரீதியில் எடுக்கும் முடிவுகளில் கோவில் நிர்வாக அதிகாரி தலையிட முடியாது,” என்றார்.

விசாரணையின் போது அதிகாரிகளின் வாதங்களால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ‘எங்களது உத்தரவைச் செயல்படுத்தினீர்களா இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள்’ என, கேட்டனர். அதற்கு கலெக்டர் தரப்பில் “ஆம், செயல்படுத்தினோம் எனப் பதிலளிக்கப்பட்டதும், ‘இல்லையே, அப்படிச் செய்திருந்தால் எதற்காக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் வரப்போகின்றன?’ என நீதிபதிகள் திருப்பிக் கேட்டனர்.

* முதலை கண்ணீரா?

காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்ட போது, ‘‘நாங்கள் விரிவாக விசாரிக்கிறோம். நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா அல்லது முதலைக் கண்ணீரா என்பதை நாங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்கிறோம், என நீதிபதி அரவிந்த் குமார் காட்டமாகத் தெரிவித்தார்.

‘அறங்காவலர் குழுவினர் எந்த அடிப்படையில் கூடினர்?’ என நீதிபதிகள் கேட்டதற்கு, ‘‘அவர்களாகவே கூடினார்கள்,’’ என நிர்வாக அதிகாரி பதிலளித்தார். அதற்கு நீதிபதிகள், ‘இல்லை, அவர்களாகக் கூட முடியாது. அதற்கென்று ஒரு அதிகாரி முறைப்படி அழைப்பு விடுத்து அதன்படியே அவர்கள் கூடி முடிவெடுக்க முடியும்; உங்கள் சட்டம் அதைத்தான் சொல்கிறது’ என்று சுட்டிக்காட்டினர்.

உத்தரவில் அறநிலையத்துறை தளர்வு எடுத்துக் கொண்டதாக அபிஷேக் மனு சிங்வி கூறியபோது கடுமையாக மறுத்த நீதிபதி அரவிந்த் குமார், ‘‘நாங்கள் அப்படியெல்லாம் எதுவுமே சொல்லவில்லை. அந்தக் குறிப்பிட்ட துாணில் தற்காலிக நடவடிக்கையாகத் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் சொன்னோம். இதில் நீங்களாகப் புரிந்து கொண்டு அதை மாற்ற முயற்சிக்காதீர்கள்,’’ என, கண்டனம் தெரிவித்தார்.

விசாரணையின் போது தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் மற்றும் டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்களை நீதிபதிகள் கேட்டு வாங்கி எழுதி வைத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us