விஸ்வரூபம் எடுக்கும் பி.எம்., ஸ்ரீ விவகாரம்; கேரள ஆளும் கூட்டணிக்குள் சலசலப்பு
விஸ்வரூபம் எடுக்கும் பி.எம்., ஸ்ரீ விவகாரம்; கேரள ஆளும் கூட்டணிக்குள் சலசலப்பு
ADDED : அக் 29, 2025 03:08 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், 'பி.எம்., ஸ்ரீ' எனப்படும், 'பிரதமரின் எழுச்சிமிகு இந்தியாவுக்கான பள்ளிகள்' திட்டம் தொடர்பாக, ஆளும் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 'நவ., 4 வரை அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை' என, இ.கம்யூ., தெரிவித்துள்ளது.
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கட்டமைப்பு வசதி
இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் இ.கம்யூ., கட்சிக்கு, 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர், அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர்.
தேசிய கல்வி கொள்கையின் கீழ் பி.எம்., ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு பள்ளிகளை தேர்வு செய்து, கல்வியின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மே ம்படுத்தி, முன்மாதிரி பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தை அமல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதை அமல்படுத்தக்கூடாது என்பதில், கூட்டணியின் முக்கிய கட்சியான இ.கம்யூ., விடாப்பிடியாக இருந்தது.
முதலில் தயக்கம் காட்டிய முதல்வர் பினராயி விஜயன், சமீபத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து, மாநில அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல், பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கேரள கல்வித்துறை கையெழுத்திட்டது.
கேரளாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெறவே பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததாக கல்வி அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்தார். எனினும் இதை இ.கம்யூ., ஏற்கவில்லை.
இத்திட்டத்தில் இணைந்ததற்காக, மார்க்.கம்யூ., கட்சியை இ.கம்யூ., தொடர்ந்து விமர்சித்து வருவதால், ஆளும் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த முதல்வர் பினராயி விஜயன், இ.கம்யூ., மாநில செயலர் பினோய் விஸ்வம் மற்றும், அக்கட்சியின் அமைச்சர்கள் கே.ராஜன், ஜி.ஆர்.அனில், பி.பிரசாத் ஆகியோரை சமீபத்தில் சந்தித்து பேசினார். எனினும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
வலியுறுத்தல் பி.எம்., ஸ்ரீ திட்டத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது அதை கிடப்பில் போட வேண்டும் என, இ.கம்யூ., வலியுறுத்தி வருகிறது.
'இ.கம்யூ., மாநில கவுன்சில் கூட்டம், நவ., 4ல் நடக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதுவரை மாநில அமைச்சரவை கூட்டங்களில் எங்களின் அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என, இ.கம்யூ., திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கேரளாவில், தமிழகத்துடன் சேர்த்து அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பி.எம்., ஸ்ரீ திட்டம் தொடர்பாக, ஆளும் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

