விரைவில் 'மேட் இன் இந்தியா' விமானம்; ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தகவல்
விரைவில் 'மேட் இன் இந்தியா' விமானம்; ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தகவல்
UPDATED : அக் 29, 2025 10:17 AM
ADDED : அக் 29, 2025 03:15 AM

புதுடில்லி: நம் நாட்டின், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம், பயணியர் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக ரஷ்யாவின், 'யுனைடெட்' விமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் மூலம் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசின், எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம் உள்நாட்டிலேயே பயணியர் விமானம் தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தற்போது இந்நிறுவனம் ராணுவத்துக்கு தேவையான, 'தேஜஸ்' இலகு ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் ஆகியவற்றை தயாரித்து வழங்கி வருகிறது. முதல் முறையாக பயணியர் விமானத்தை முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்க உள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ரஷ்யாவின், 'யுனைடெட்' விமான நிறுவனத்துடன் இணைந்து, எஸ்.ஜெ., - 100 வகை பயணியர் விமானங்கள் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், நம் நாட்டில் முதன் முறையாக பயணியர் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த விமானம் குறுகிய துார விமான சேவைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
சிறு நகரங்களை இணைக்கும், 'உதான்' விமான திட்டத்தில் முக்கிய பங்காற்றும். அடுத்த, 10 ஆண்டுகளில் குறுகிய துார விமானங்கள், 200க்கும் மேல் தேவைப்படும். விமான போக்குவரத்து துறையில், 'சுய சார்பு இந்தியா' கனவை நனவாக்கும் ஒரு முக்கியப்படியாக எஸ்.ஜெ., 100 விமானம் அமையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

