வெள்ளை பூண்டு விலை கிடுகிடு கிலோ ரூ.550க்கு விற்பனை
வெள்ளை பூண்டு விலை கிடுகிடு கிலோ ரூ.550க்கு விற்பனை
ADDED : பிப் 13, 2024 06:56 AM

பெங்களூரு: சமையலுக்கு அத்தியாவசியமான, வெள்ளை பூண்டின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கிலோவுக்கு 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், தக்காளி கிலோவுக்கு 150 ரூபாயை எட்டியது. விவசாயிகள் பலரை, ஒரே நாளில் லட்சாதிபதி ஆக்கியது. சிலரை கோடீஸ்வரராக்கியது. கடனில் இருந்து மீள, உதவியாக இருந்தது. தற்போதுm வெள்ளை பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அன்றாட சமையலுக்கு பூண்டு இன்றி அமையாதது. ரசம், சாம்பார், கோபி மஞ்சூரி, சைவம், அசைவம் உட்பட அனைத்து விதமான உணவையும், பூண்டு இல்லாமல் சமைக்கவே முடியாது. ஆனால் பூண்டு விலை 500 ரூபாயை எட்டியுள்ளது.
விலையை கேட்டு பெண்கள் அதிர்கின்றனர். கிலோ கணக்கில் வாங்கிய பெண்கள், இப்போது கிராம் கணக்கில் வாங்குகின்றனர்.
பொதுவாக வெங்காயம் விற்பனை செய்யும் வியாபாரிகள், வெள்ளை பூண்டையும் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் சில நாட்களாக சில்லரை வியாபாரிகள், வெங்காயம் மட்டுமே விற்கின்றனர்.
இம்முறை எதிர்பார்த்த அளவில், மழை பெய்யவில்லை. மிக அதிகமான பூண்டு விளையும் கர்நாடக வட மாவட்டங்கள், நாசிக், மஹாராஷ்டிரா, பூனாவில் இருந்து பூண்டு வரத்து குறைந்துள்ளது.
கோடைக்காலம் துவங்கும் முன்பே, வெயில் கொளுத்துகிறது. அணைகள், கால்வாய்களில் வரத்து குறைந்துள்ளது. எனவே விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதுவே விலை உயர்வுக்கு காரணம்.
ஏற்கனவே சேமிப்பில் இருந்த பூண்டு மட்டுமே, மார்க்கெட்டுக்கு வருகிறது. புதிய விளைச்சல் மார்க்கெட்டுக்கு வரும் வரை, இதே விலை நீடிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏ.பி.எம்.சி.,யில் தரமான உருண்டை பூண்டு விலை, கிலோவுக்கு 500 ரூபாய், உதிர்த்த பூண்டு விலை 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை வியாபாரிகள் 550 ரூபாய்க்கு விற்கின்றனர்.