வட மாவட்டங்களில் வாட்டும் வெயில் தேர்தலில் ஓட்டு சதவீதம் பாதிக்கும் அபாயம்?
வட மாவட்டங்களில் வாட்டும் வெயில் தேர்தலில் ஓட்டு சதவீதம் பாதிக்கும் அபாயம்?
ADDED : மார் 04, 2024 07:11 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், கர்நாடகாவின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம் குறையுமோ என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.
கோடைக்காலத்துக்கு முன்பே, கர்நாடகாவின் பல மாவட்டங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் வெப்பம் மக்களை வறுத்தெடுக்கிறது. வெளியே தலை காண்பிக்கவே அஞ்சுகின்றனர். வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் பெலகாவி, கலபுரகி, பல்லாரி, விஜயநகரா உட்பட வட மாவட்டங்களின் பல பகுதிகளில் வெப்பம் விபரீதமாக இருக்கும் வாய்ப்புள்ளது.
இதே நேரத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும். ஏற்கனவே வெப்பத்தால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இத்தகைய நேரத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை, தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. ஓட்டுச்சாவடிகளை அமைப்பது, வாக்காளர் பட்டியல் சீராய்வு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது என, பல பணிகளை செய்து வருகின்றனர்.
இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் முயற்சிக்கின்றனர். இவர்களின் முயற்சிக்கு வெப்பத்தின் தாக்கம், முட்டுக்கட்டையாக இருக்குமோ என்ற கவலை, அதிகாரிகளை வாட்டி வதைக்கிறது.
வெப்பம் அதிகரிப்பதால், தேர்தல் பிரசாரத்துக்கும் தொந்தரவாக இருக்கும். மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது கஷ்டமாக இருக்கும்.
ஓட்டுப்பதிவு நாளன்று, வெயில் அதிகமாக இருந்தால், மூத்த குடிமக்கள் ஓட்டுபோட ஓட்டுசாவடிக்கு வருவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஓட்டு பதிவு சதவீதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

