ADDED : நவ 07, 2025 01:14 AM
சாகர்பூர்: கடன் தொல்லை காரணமாக முதலாளி வீட்டில் 4.45 லட்ச ரூபாயை திருடிய வேலைக்காரனை போலீசார் கைது செய்தனர்.
தென்மேற்கு டில்லியின் சாகர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மாதம் 30ம் தேதி 4.45 லட்ச ரூபாய் திருடு போனது. வீட்டின் உரிமையாளர், போலீசில் புகார் அளித்தார். வீட்டு வேலைக்காரனும் மாயமாகி இருந்தார்.
அந்த வீட்டில் வேலை செய்து வந்த அவர், பணத்துடன் தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். குற்றவாளியின் நடவடிக்கையை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர், வேலைக்காரனின் நடவடிக்கையை கண்காணித்தனர்.
பணம் திருடியதை உறுதி செய்த பின், அலிகரில் பதுங்கியிருந்த சிவம் சக்சேனா, 30, என்ற வேலைக்காரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3.29 லட்சம் பணத்தையும் மீட்டனர்.
திருடிய பணத்தில் வாங்கிய வாஷிங் மெஷின், காஸ் சிலிண்டர், மொபைல் போன், துணிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சோனிபட்டில் பலரிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக முதலாளி வீட்டில் திருடியதை சிவம் சக்சேனா ஒப்புக்கொண்டார்.

