UPDATED : அக் 23, 2026 07:02 PM
ADDED : அக் 23, 2026 06:56 PM
சண்டிகர்: சண்டிகரில், பிளஸ்1 படித்த, 17 வயது மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சண்டிகர், 22வது செக்டாரில் வசித்தவர், நைதிக்,17. செக்டார் 32ல் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்தார்.
சம்பவத்தன்று காலை ஆட்டோவில் சென்ற போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த இருவர், ஆட்டோவுக்குள் இருந்த நைதிக் மீது, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ரத்த வெள்ளத்தில் நைதிக் சரிந்தார். ஆட்டோவில் இருந்த மற்றொருவர் மீதும் குண்டு பாய்ந்தது.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு, இருவரும் கொண்டு செல்லப்பட்டனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், நைதிக் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். காயம் அடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும், சிறுவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாணவர்களிள் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காணொலியை ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு குழுவை சேர்ந்த இருவர், நைதிக்கை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை நடக்கிறது.
