சிரியாவில் நிலைமை மோசம்; டில்லி திரும்பிய இந்தியர்கள் சொல்வது இதுதான்!
சிரியாவில் நிலைமை மோசம்; டில்லி திரும்பிய இந்தியர்கள் சொல்வது இதுதான்!
ADDED : டிச 15, 2024 07:03 AM

புதுடில்லி: 'சிரியாவில் நிலைமை மோசமாக உள்ளது. இருப்பினும் இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. உதவி செய்த தூதரகத்திற்கு நன்றி' என டில்லி திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர்.
மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த பஷார் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இவருக்கும், பல கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே, கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. அபு முகமது அல் கோலானி தலைமையிலான ஹயாத் தாஹ்ரிர் அல் ஷாம் என்ற கிளர்ச்சி படை, சமீபத்தில், தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியது.
இதையடுத்து நாட்டை விட்டு தனி விமானத்தில் தப்பிய பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வேலை உள்ளிட்ட காரணத்திற்காக சிரியாவில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக, டில்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய, இந்தியர்கள் 77 பேர், சிரியாவில் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
சண்டிகரை பூர்வீகமாக கொண்ட மெக்கானிக்கல் இன்ஜினியர் சுனில் கூறியதாவது: தெருக்களில் சமூக விரோதிகள் உள்ளனர். அவர்கள் பொருட்களை கொள்ளையடிக்கின்றனர். நிலைமை மோசமாக உள்ளது. ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இருப்பினும் இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. எங்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் உறுதி செய்தது. அமைதியாக இருக்க வேண்டும். வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
கிரேட்டர் நொய்டாவை பூர்வீகமாக கொண்ட கபூர் கூறியதாவது: நாங்கள் சிரியாவில் ஏறக்குறைய 7 மாதங்கள் இருந்தோம். டிசம்பர் 7ம் தேதி நிலைமை மோசமடைந்தது. தீ மற்றும் குண்டுவெடிப்புகளை பார்த்தோம். இது ஒரு பீதி சூழ்நிலை. நாங்கள் மிகவும் பாதுகாப்பாக லெபனானுக்கு சென்றோம். நாங்கள் எந்த பிரச்னையும் சந்திக்கவில்லை. எங்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி மிகவும் நன்றாக இருந்தது. எங்களுக்கு உதவி செய்த வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
நாடு திரும்பிய ரத்தன் லால் கூறியதாவது: நான் கடந்த 5 ஆண்டுகளாக சிரியாவில் இருக்கிறேன். நிலைமை மோசமாக இருந்தது. எப்படியாவது திரும்பி வருமாறு குடும்பத்தினர் கூறினர். கடந்த 10 ஆண்டுகளாக சிரியாவில் கண்ணாடி பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். நாங்கள் 3 நாட்கள் டமாஸ்கஸில் தங்கியிருந்தோம். எங்களுக்கு நாடு திரும்புவதற்கு இந்திய தூதரகம் நிறைய உதவிகளை செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.