வெடி சத்தம் ஓயவில்லை; அடி வாங்கும் பாகிஸ்தான்! எல்லையில் தொடர்கதையாகும் துப்பாக்கி சூடு
வெடி சத்தம் ஓயவில்லை; அடி வாங்கும் பாகிஸ்தான்! எல்லையில் தொடர்கதையாகும் துப்பாக்கி சூடு
ADDED : மே 04, 2025 05:29 AM

தங்களுக்கு எதிராக இந்தியா உடனடியாக போர் தொடுக்கும் என இரவு, பகலாக கண் விழித்து காத்திருக்கிறது, பாகிஸ்தான்.
எல்லையில் படை குவிப்பு, போருக்கான ராணுவ ஒத்திகை, தினம், தினம் ஆக்ரோஷமூட்டும், பேச்சுக்கள், அறிக்கைகள் என, பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு, எகிறிக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, இறுதி வாய்ப்பாக தான் போர் இருக்கும். அதற்கான முன்னோட்டத்தில், இந்தியா தீவிரமாக இருக்கிறது.
உலக அரங்கில் பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் துாதரக ரீதியாலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அமைச்சர்களே, தங்கள் முந்தையகால பயங்கரவாத வரலாறுகளை, ஒவ்வொன்றாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப், வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஆகியோர், நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் தான் என பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளனர். பாக்., ராணுவமும், போர் பதட்டத்தை ஆதரிக்கிறது.
கடந்த, 1999ம் ஆண்டு, கார்கில் போரில் இந்தியாவுடன் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றபின், சில காலம் அடக்கி வாசித்தது. அதற்கு முன், கட்டுப்பாடு எல்லைக்கோட்டில் எப்போதும், துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
கடந்த 25 ஆண்டுகளில், இந்தியாவுடன் பல முறை சண்டை நிறுத்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் செய்துள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஒப்பந்தத்தை மீறுவது, பாகிஸ்தானாக தான் இருக்கிறது. சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் என போன்ற இருதரப்பு அமைதி நடவடிக்கைகளை, பாகிஸ்தான் ஒரு போதும் பின்பற்றியது கிடையாது.
கடந்த 10 நாட்களாக ஜம்மு - காஷ்மீர் கட்டுப்பாடு எல்லை கோடு பகுதியில் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. உரி, குப்வாரா, அக்னுார், நவுஷாரா பகுதிகளில் இரவு நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி தந்து வருகிறது.
'ஹாட்லைன்' பேச்சு
இது தொடர்பாக, இந்திய ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குனர் அந்நாட்டு ராணுவ இயக்குனருடன் ஹாட்லைன் வழியாகவும் பேசி, நமது எதிர்ப்பை தெரிவித்தார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்த உடனே, பாகிஸ்தான் எல்லையில் வாலாட்டத் துவங்கியுள்ளது.
நமது நிருபர்

