ADDED : நவ 14, 2024 09:38 PM

ஹூப்பள்ளி நகர், ஹெக்கேரியின், இன்டி பம்ப் அருகில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானம் சரியான நிர்வகிப்பு இல்லாததால், விளையாட்டு வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஹூப்பள்ளி நகர் ஹெக்கேரியின் இன்டி பம்ப் அருகில், அம்பேத்கர் விளையாட்டு மைதானம் உள்ளது. புவனேஸ்வரி நகர், ஜெகதீஷ் நகர், மாருதி நகர், கே.ஹெச்.காலனி.
பிரசாந்த் நகர் உட்பட சுற்றுப்பகுதி விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்ய வசதியாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் மாநகராட்சி, இந்த விளையாட்டு அரங்கை உருவாக்கியது. இதற்காக ௧ கோடி ரூபாய் செலவிட்டது.
ஆனால், அடிப்படை வசதிகளை செய்யவில்லை. விளையாட்டு அரங்கு வளாகத்தில் தடுப்புச்சுவர் கட்டாததால், இரவு நேரத்தில் இந்த அரங்கம், குடிகாரர்களின் புகலிடமாக மாறுகிறது.
சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். விளையாட்டு அரங்கில் எங்கு பார்த்தாலும், மது பாட்டில்கள், உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகள், பயன்படுத்தி வீசியெறிந்த பிளேட்டுகள், கிளாஸ்கள் கிடக்கின்றன.
இதற்கு முன் விளையாட்டு அரங்கம் நன்றாக இருந்தது. அப்போது பல்வேறு விளையாட்டு போட்டிகள், ஏற்பாடு செய்யப்பட்டன. கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால் மழை பெய்ததால், விளையாட்டு அரங்கம் சீர்குலைந்துள்ளது.
மழை நீர் செல்வதற்கு, சரியான வசதி இல்லை. இதனால் தண்ணீர் தேங்கி நாய்கள், பன்றிகள் வசிக்கும் இடமாக மாறியுள்ளது.
விளையாட்டு அரங்கின் சூழ்நிலையால், விளையாட்டு வீரர்கள், பயிற்சி பெற கஷ்டமாக உள்ளது. இதை சீரமைக்கும்படி அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இப்பகுதியின் இளம் விளையாட்டு வீரர் ராகுல் தேவரமனி கூறியதாவது:
ஹெக்கேரி பகுதியில் இருக்கும், ஒரே ஒரு பொது மைதானம் இதுதான். இந்த மைதானத்தில் விளையாட்டு வீரர்களை விட, குடிகாரர்களே அதிகம் காணப்படுகின்றனர். மைதானத்தை அவ்வப்போது பராமரித்தால், எங்களை போன்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.
மைதானம் முழுதும் நீர் தேங்கி, சேறும், சகதியுமாக உள்ளது. விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்ய முடிவது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக மைதானத்தின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -