ADDED : நவ 24, 2024 11:08 PM

உறவினர்கள், தெரிந்தவர்களுக்கே உதவி செய்ய தயங்கும் காலத்தில், நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனாலும் ஒரு சிலர் இன்னும் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர். இவர்களில் ஒருவரை பற்றி பார்க்கலாம்.
குடகு மடிகேரியை சேர்ந்தவர் ஷீலா, 37. திருமணம் முடிந்து தற்போது கணவருடன் கொப்பால் டவுனில் வசிக்கிறார். சமூக ஆர்வலரான இவர், 'சகஜா' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார்.
அந்த அறக்கட்டளையின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்கிறார். இது மட்டுமின்றி நாடோடி சமூக பெண்களுக்கும் அனைத்து விதத்திலும் உதவுகிறார்.
இது பற்றி ஷீலா கூறியதாவது:
என் சிறுவயதில் என் தாய் பட்ட கஷ்டங்களை நேரில் பார்த்து வளர்ந்து உள்ளேன். பெரியவள் ஆனதும் பெண்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
கல்லுாரி முடிந்ததும், பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது, கணவருடன் கொப்பாலில் வசிக்கிறேன். இங்கு உள்ள நகர பகுதிகளில் ஏராளமான நாடோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஊசி, பாசி விற்றும், தேன் விற்பனை செய்தும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இந்த சமூகத்தை சேர்ந்த பெரும்பாலான பெண்களுக்கு எழுத படிக்க தெரியவில்லை.
இதனால் அரசிடம் இருந்து கிடைக்கும் சலுகைகள் முறையாக அவர்களை சென்றடைவது இல்லை.
இதனால் அந்த பெண்களுக்கு எழுத, படிக்க கற்று தர வேண்டும் என்று நினைத்தேன். எனது அறக்கட்டளையில் வேலை செய்வோர் உதவியுடன், நாடோடி சமூக பெண்களுக்கு எழுத, படிக்க கற்றுத் தருகிறேன்.
இங்கு குழந்தை திருமணம் சர்வசாதாரணமாக நடந்தது. குழந்தைகளும் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை. குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதகங்கள் குறித்தும், சரியாக பள்ளிக்கு செல்லா விட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் எடுத்து கூறி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினோம்.
இதனால் இப்போது குழந்தை திருமணங்கள் நின்றுள்ளன; குழந்தைகளும் பள்ளிக்கு சரியாக செல்கின்றனர்.
சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கு யாராவது ஒருவர் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
-- நமது நிருபர் -.