ADDED : டிச 09, 2024 06:57 AM

ஹூப்பள்ளி: ''தரமான மருந்துகளை வாங்கவும், மாநில அரசிடம் பணம் இல்லை. தரமற்ற மருந்துகளை வினியோகிக்கும் நிறுவனங்களிடம் மருந்துகள் வாங்குகிறது,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம்சாட்டினார்.
இது குறித்து, ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகளே இல்லை. டாக்டர்கள் சீட்டு எழுதி கொடுத்து,
வெளியே வாங்கி வரும்படி நோயாளிகளிடம் கூறுகின்றனர். மாநிலத்தை இத்தகைய சூழ்நிலைக்கு காங்கிரஸ் அரசு தள்ளிவிட்டது. தரமான நிறுவனங்களிடம் மருந்துகள் வாங்க, மாநில அரசிடம் பணம் இல்லை.
எனவே கண்ட, கண்ட நிறுவனங்களிடம் மருந்துகள் வாங்குகிறது. இதன் விளைவாக பல்லாரியில் குழந்தை பிரசவித்த பெண்கள் இறக்கின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவுக்கு, கண் கெட்ட பின் புத்தி வந்துள்ளது. சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்துள்ளார். தன் தவறை மூடி மறைக்க, மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார். ஐ.வி., குளுக்கோசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்.
மத்திய அரசிடம் அனுமதி பெறும் போது, தரமான மருந்துகள் அனுப்பி அதன்பின் நிறுவனங்கள் தரமில்லாத மருந்துகளை அனுப்பினால், அதற்கு மத்திய அரசு பொறுப்பா. மருந்துகள் சப்ளையாகும் போது, அவற்றின் தரத்தை மாநில அரசு பரிசோதிக்க வேண்டாமா.
இவ்வாறு அவர் கூறினார்.