இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணி மும்முரம்! துபாய், ஜெட்டாவுக்கு பறந்தன சிறப்பு விமானங்கள்
இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணி மும்முரம்! துபாய், ஜெட்டாவுக்கு பறந்தன சிறப்பு விமானங்கள்
ADDED : மார் 04, 2026 01:30 AM

புதுடில்லி: ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக மேற்காசிய நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில், மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. 'இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மேற்காசியாவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு, தாயகம் அழைத்து வரப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்காசிய நாடுகளான ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மேகம் சூழ்ந்திருப்பதால், அந்த பிராந்தியத்தின் சர்வதேச வான்வெளிப் பகுதி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. விமான போக்குவரத்து முடங்கியதால், ஐக்கிய அரசு எமிரேட்சின் துபாய் விமான நிலையம் ஸ்தம்பித்துள்ளது. அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இந்திய பயணியர் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், 'இண்டிகோ, ஏர் இந்தியா' மற்றும் 'ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனங்களின் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் துபாயில் இருந்து நேற்று காலை இந்திய பயணியர் பத்திரமாக தாயகம் திரும்பினர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்தும் இண்டிகோ நிறுவனத்தின் 10 சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. தாக்குதல் நடக்காத சமயத்தில், சூழ்நிலையை பொறுத்து அந்த விமானங்கள் புறப்படும் என தெரிகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட வான்வெளியை தவிர்த்து, மாற்று வழியில் விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், துபாயில் சிக்கி இருக்கும் பயணியரை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மும்முரமாக செய்து வருகிறது.
இதற்கிடையே, இந்தியா - மேற்காசியா இடையே வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள், வான்வெளி கட்டுப்பாடுகள் அடிப்படையில் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தலைமையில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், விமான நிறுவனங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
விமான டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்குதல், விமான நேரத்தை மாற்றி அமைத்தல், பயணியருக்கான உதவி ஆகியவற்றை தெளிவாகவும், வெளிப்படையாகவும் வழங்க வேண்டும் என்றும், பயணியரின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் விமான நிறுவனங்களிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பான சேவைகளை உறுதி செய்யும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
![]() |


