ADDED : செப் 20, 2024 08:40 PM
புதுடில்லி:கொலை முயற்சி உட்பட இரண்டு வழக்குகளில் தேடப்பட்டவர் பால்ஸ்வா டெய்ரி பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புதுடில்லியைச் சேர்ந்தவர் லாங்டா என்ற அமித். இவர் மீது கொலை முயற்சி உட்பட இரண்டு குற்ற வழக்குகள் உள்ளன. போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 12:52 மணிக்கு, பி.ஜே.ஆர்.எம்., மருத்துவமனையில் இருந்து போன் செய்தனர். துப்பாக்கியால் சுடப்பட்ட ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளார் என கூறினர்.
போலீசார் செல்வதற்குள் அவர் மரணம் அடைந்தார். போலீசார் வந்தவுடன், கொல்லப்பட்டவர் குற்றவழக்குகளில் தேடப்படும் அமித் என்பது தெரிந்தது. தலை மற்றும் வலது தொடையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.
முகுந்த்பூர் சவுக் சர்வீஸ் சாலை அருகே, எதிரிகளுடன் நடந்த சண்டையில் அமித் கொல்லப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அங்கு சென்ற போலீசார், இரண்டு தோட்டாக்களை கைப்பற்றினர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொழில் போட்டியில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது.