UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 08:24 PM

ஊசி போடாமலே
முடக்குவாதம் நீங்கியது
சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த நபருக்கு 30 வயதிருக்கும். கால்கள் செயல் இழந்து முடங்கி விட்டதாக கூறி, பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரது தட்டில் சில ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அவரது முடக்குவாதத்தை குணமாக்குவதாக கூறி இருவர் வந்தனர். ஒருவர் மெகா சைஸ் ஊசியை கையில் வைத்திருந்தார்.
‘இந்த ஊசியை போட்டுக் கொண்டால், எழுந்து நடக்கலாம்’ என்று அந்த பிச்சைக்காரரிடம் கூறினார். அவரோ, ‘நிஜமாகவே நடக்க முடியுமா’ என்று கேட்டார். ஊசி வைத்திருப்பவரோ, ‘ஊசியை மட்டும் போட்டால் போதும், ஓட்டமாக ஓட முடியும்’ என்றார். ஊசி போடவும் அவர் தயாரானார். ‘இதற்கு முன் ஏதாவது சிகிச்சை பெற்றீர்களா’ என்றும் விசாரிக்க ஆரம்பித்தார்.
பயந்து போன பிச்சைக்காரர், ‘நிஜமாகவே ஊசி போட்டு விடுவார்கள் போலிருக்கிறது’ என்று எண்ணி, எழுந்து ஓட்டம் பிடித்தார். அவர், ஓட்டம் பிடிக்கும் வீடியோ, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வீடியோவை கண்ட வலைதளவாசிகள், ‘சிகிச்சை சரியாக வேலை செய்திருக்கிறது’ என்று கமென்ட் செய்து வருகின்றனர்.
பலகாரத்தில் மெய்மறந்தவர்
பணத்தை பறிகொடுத்தார்
ஜெய்ப்பூரை சேர்ந்த தொழிலதிபர் சம்பாலால், வியாபார விஷயமாக வெளியில் சென்றிருந்தார். வழியில் தென்பட்ட கடையில் ‘கச்சோரி’ பலகாரத்தை கண்டதும், அவருக்கு சாப்பிட தோன்றியது. சாலையில் பைக்கில் அமர்ந்தபடி கச்சோரி வாங்கி ருசித்து சாப்பிட்டார். அவர் மெய்மறந்து சாப்பிட்ட நேரத்தில், பைக்கில் வந்த திருடர்கள் 2 பேர், சம்பாலால் பைக்கில் இருந்த பையை பறித்துச்சென்று விட்டனர். அவருக்கோ கடும் அதிர்ச்சி. அந்த பையில் 20 லட்சம் ரூபாய் இருந்தது. ஒரு கையில் கச்சோரி பலகாரத்தை வைத்துக்கொண்டே, திருடர்களை அவர் துரத்திச்சென்ற சிசிடிவி காட்சி வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வலைதள பிரியர்கள், ‘கச்சோரியை இன்னுமா கீழே போடவில்லை’ என்று கிண்டல் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
வேறென்ன ஆதாரம் வேண்டும்?
வாழைப்பழ வியாபாரி கேள்வி
லக்னோவில் நடந்த விழாவில், காமெடியன் ஹர்ஷ் குஜ்ரால், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். ‘‘முன்பு லக்னோ வந்தபோது, வாழைப்பழ வியாபாரி ஒருவரை சந்தித்தேன். மாநிலத்தில் இன்னும் குற்றச் சம்பவங்கள் நடக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர், ‘குற்றங்கள் எல்லாம் அடியோடு ஒழிந்துவிட்டன’ என்று அடித்துக் கூறினார். ‘அது எப்படி, அத்தனை உறுதியாக உங்களுக்குத் தெரியும்’ என்று கேட்டேன், அதற்கு அவர், நானே முன்பு கிரிமினலாக இருந்து பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவன்தான். இப்போது வாழைப்பழம் விற்கிறேன், இதில் இருந்தே குற்றங்கள் ஒழிந்து விட்டதை உங்களால் புரிந்து கொள்ள முடியாதா’ என்று கேட்டார்,’’ என்றார், ஹர்ஷ் குஜ்ரால். இதைக் கேட்டதும் யோகி ஆதித்யநாத் சிரித்தார். பார்வையாளர்களும் சிரித்தனர். வலைதள பிரியர்கள், முதல்வரைப் பாராட்டியும், குஜ்ரால் சம்பவத்தை விவரித்த விதத்தை மெச்சியும் பதிவிட்டு வருகின்றனர்.
படம் பிடித்த வாலிபருக்கு
பாடம் புகட்டிய பெண்
பொது இடங்களில் சென்று வரும் பெண்களை ரகசியமாக படம் பிடிப்பது ஒரு மன வியாதி. பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், கண்டுகொள்ளாமல் இருப்பதால் இத்தகைய நபர்களுக்கு துணிச்சல் வந்து விடுகிறது. பெங்களூரு ஒயிட் பீல்டு- சாலை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் இதற்கு மாறான சம்பவம் நடந்தது. தன்னை ஒரு வாலிபர் படம் பிடிப்பதை உணர்ந்ததும், அந்த பெண் துணிச்சலாக தட்டிக் கேட்டார்.
‘என்னை ஏன் வீடியோ எடுத்தாய்? போனைத் திற’ என்று கூறி கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தார். போனையும் பறித்தார். முதலில் மன்னிப்பு கோரிய அந்த நபர், பின்னர் ‘படம் பிடிக்கவில்லை’ என்று மறுத்தார். தப்பித்தால் போதும் என்று போனை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டமும் பிடித்தார். பாதிக்கப்பட்ட பெண், இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பயிரை மேய்ந்தது வேலி
போன் விற்ற போலீஸ் கைது
கேரளா, காசர்கோடு சந்தேரா காவல் நிலையத்தில் பணியாற்றும் 41 வயது போலீஸ்காரர் பிஜு, மொபைல் போனை திருடி விற்ற சம்பவம், வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சாலையில் கிடந்த போனை ஒரு புலம்பெயர் தொழிலாளி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். அந்த போன், ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஸ்டேஷனில் பணியில் இருந்த போலீஸ்காரர் பிஜூ, அந்த போனை ரூ.1500க்கு விற்று விட்டார்.
தன் போன் காணாமல் போனது பற்றி அதன் உரிமையாளர் சைபர் கிரைம் பிரிவில் கூறியதன்படி விசாரணை நடந்தது. IMEI எண் மூலம் தேடியதில், போன் முகமது அரிஸ் என்பவரிடம் இருப்பது தெரிந்தது. அவர் அதை ஸ்டேஷனில் ஒப்படைத்ததுடன், போலீஸ்காரர் ஒருவரே தனக்கு போன் விற்றதாகவும் தெரிவித்தார். ஸ்டேஷன் சிசிடிவி காட்சிகளில், போலீஸ்காரர் பிஜு போனை எடுத்து விற்றது பதிவாகி இருந்தது. போலீசார், பிஜூவை கைது செய்துள்ளனர்.
போதையில் பெண் போலீஸ்
காரோட்டியதால் சஸ்பெண்ட்
புனேவின் மஞ்சரி பகுதியில், சீருடையில் இருந்த 39 வயது பெண் போலீஸ் ஒருவர் போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் வாகனம் ஓட்டினார். அந்த வாகனத்தில் நம்பம் பிளேட்டும் இல்லை. இதைக்கண்ட பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்தனர். அவரிடம் கேள்வியும் எழுப்பினர். அப்போது மது அருந்தியதை அவர் ஒப்புக்கொண்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. வீடியோ வைரல் ஆன நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
