நாயை விரட்டி அடித்த இளைஞர் 3வது மாடியிலிருந்து விழுந்து பலி
நாயை விரட்டி அடித்த இளைஞர் 3வது மாடியிலிருந்து விழுந்து பலி
ADDED : அக் 23, 2024 02:18 AM
ஹைதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில், ஹோட்டலின் மூன்றாவது மாடி வராண்டாவில் சுற்றித் திரிந்த நாயை துரத்திச் சென்ற இளைஞர், அங்கிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
ஹைதராபாதின் ஜோதி நகரைச் சேர்ந்தவர் உதய், 23; பெயின்டர். இவரும், மேலும் சிலரும் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த தங்களது நண்பரின் பிறந்த நாளை கொண்டாட, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு திரண்டனர்.
ஜோதி நகர் சாலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இளைஞர்கள், பின், சந்தாநகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சென்றனர்.
நண்பர்கள் அனைவரும் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள பப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, உதய் வெளியே வராண்டாவில் நடந்து சென்றார். அப்போது, அவர் எதிரே நாய் ஒன்று வாலாட்டியபடி நின்றிருந்தது.
உதய் அந்த நாயை விரட்டிச் சென்றார். கீழே செல்ல முடியாத நாய் திரும்பி வாராண்டாவின் மூலைக்கு சென்றது.
அதை வேகமாக துரத்திச் சென்ற உதய் நிலை தடுமாறி, திறந்திருந்த ஜன்னல் வழியாக மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதை அறிந்த அவரின் நண்பர்கள், உடனடியாக உதயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உதய் ஏற்கனவே இறந்ததாக கூறினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

