ADDED : பிப் 22, 2024 07:18 AM

பெங்களூரு: ''முந்தைய ஆட்சிக் காலங்களில், 'முதல்வர் விருப்ப கோட்டா'வின் கீழ், பல்வேறு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது,'' என, தகவல் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - பசவராஜ் பொம்மை: முதல்வர் சித்தராமையா, நிதி ஒழுக்கத்தை அழித்துள்ளார்.
குறுக்கிட்ட அமைச்சர் பிரியங்க் கார்கே: முன்னாள் முதல்வர் கூறிய புள்ளி விபரங்களில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் முதல்வர் விருப்ப கோட்டாவின் கீழ், எனது துறையில் மட்டும், 7,000 முதல் 8,000 கோடி ரூபாய் வரையிலான பில் நிலுவையில் இருந்தது.
கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வைக்கப்பட்டு உள்ள 1,000 கோடி ரூபாய் எடுக்கப்பட்டு, 'முதல்வர் விருப்ப கோட்டா'வின் கீழ் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது எப்படி நிதி ஒழுக்கமின்மையாகும்?
முந்தைய முதல்வர்கள் எத்தனை பணிகளுக்கு அனுமதி அளித்து உள்ளனர். விருப்ப கோட்டாவின் கீழ் எவ்வளவு பணம் விடுவிக்கப்பட்டு உள்ளது என்ற புள்ளி விபரங்களை எனக்குக் கொடுங்கள்.
காங்கிரஸ் - சிவலிங்க கவுடா: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் தள்ளிப்போனதால், பொதுப்பணி துறையில் நிதி ஒழுக்கம் சீர்குலைந்து உள்ளது.
பசவராஜ் பொம்மை: முதல்வரின் விருப்ப கோட்டாவின் கீழ் நிதி ஒதுக்க வேண்டுமானால், நிதித்துறையின் முன் அனுமதி பெற்ற பிறகே பணிகளுக்கு அனுமதி அளித்து உள்ளோம்.
மாநில வருமானத்தில் 19 சதவீதம், கடன் மற்றும் வட்டிக்கே செல்கிறது. 11 ஆண்டுகளுக்கு பின் கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலையை, 2013ல் சித்தராமையா அரசு அரசு எதிர்கொண்டது. 2023ல் அதற்கு பணம் செலுத்தி உள்ளோம்.
அமைச்சர்: அரசு தொடர்ந்து செயல்படுகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், கடந்த அரசுகள் பெற்ற கடனை, ஆட்சி புரிபவர்கள் அடைக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.
இவ்வாறு விவாதம் நடந்தது.