சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் இல்லை; லோக்சபாவில் திருமா பேச்சு
சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் இல்லை; லோக்சபாவில் திருமா பேச்சு
ADDED : டிச 14, 2024 02:36 PM

புதுடில்லி: சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் இல்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்த உடன்பிறப்புகள் என்ற உணர்வை பெற வேண்டும் என லோக்சபாவில் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ., 25ம்தேதி தொடங்கியது. இன்று (டிச.,14) அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, லோக்சபாவில் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: இந்த தேசத்தின் எதிர்காலத்தை எண்ணி, நான் வேதனை அடைகிறேன். அரசியல் ஜனநாயகத்தை வென்று எடுத்துவிட்டோம். ஆனால் சமூக ஜனநாயகம் கேள்வி குறியாகவே உள்ளது. பொருளாதார ஜனநாயகம் கேள்வி குறியாக இருக்கிறது. சுதந்திரம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் நடைமுறைக்கு வராது.
சமத்துவம் இல்லாமல், சுதந்திரமும், சகோதரத்துவமும் இங்கே வெற்றிகரமாக இயங்காது. ஆகையால் ஒவ்வொன்றையும் தனி தனியாக பிரித்துவிட முடியாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் நடைமுறை படுத்தும் போது தான், சமூக ஜனநாயகத்தை உருவாக்க முடியும். சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் இல்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்த உடன்பிறப்புகள் என்ற உணர்வை பெற வேண்டும். இது தேசிய இனமாக இல்லை. நாம் அனைவரும் ஒரே தேசிய இனம் என்று கூட சொல்ல முடியாது.
அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையில் பா.ஜ., அரசு இறங்கி உள்ளது. மதசார்பின்மை, கூட்டாச்சி தத்துவம் என்பது அரசியல் அமைப்பின் அடிப்படை தத்துவம். நாட்டை விட மத நம்பிக்கை மேலானதா? அல்லது மத நம்பிக்கையை விட நாடு மேலானதா? என்ற கேள்விக்கு யார் பதில் கூற போகிறார்கள். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்கி இருப்பது அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

