கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க... தடையில்லை !
கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க... தடையில்லை !
ADDED : டிச 18, 2024 12:56 AM
புதுடில்லி, கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில், கடந்த ஜூன் 19ல் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தில், கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி., -- எஸ்.பி., ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி., - டி.எஸ்.பி., உள்ளிட்ட ஒன்பது போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
நியாயமான விசாரணை
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி, கடந்த நவ., 20ல் உத்தரவிட்டது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம் அரிதான வழக்கு என்பதால், பாரபட்சமற்ற, நியாயமான விசாரணை தேவைப்படுகிறது.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கல் எறியும் துாரத்தில் தான், இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசாருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.
தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ., வசம் தமிழக போலீசார் ஒப்படைக்க வேண்டும்.
புலன் விசாரணைக்கு, மாநில போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை அணுகுவதில், சி.பி.ஐ.,க்கு தகுதி உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமீபத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அதில், 'சி.பி.ஐ., வசம் வழக்கை ஒப்படைத்தால் புலன் விசாரணை முடிய தாமதமாகும். தமிழக போலீசாரே விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், 'இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் திறம்பட விசாரித்தனர். எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டியது இல்லை' என்றார்.
விரும்பவில்லை
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. எனவே சி.பி.ஐ., விசாரித்தால் தான் சரியாக இருக்கும். சி.பி.ஐ., விசாரிப்பதில் என்ன பிரச்னை ஏற்பட போகிறது?' என, கேள்வி எழுப்பினர்.
மேலும், 'சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி இருக்கிறது. எனவே உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை' எனக் கூறி, மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.