பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது; அடியோடு ஒழிக்க எந்த நிலைக்கும் தயார்
பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது; அடியோடு ஒழிக்க எந்த நிலைக்கும் தயார்
ADDED : ஏப் 14, 2024 06:17 AM

புனே: ''பயங்கரவாதிகளுக்கு என்று தனியாக எந்த விதிகளும் கிடையாது. அதுபோல, பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் விதிகள் இருக்கக் கூடாது. பயங்கரவாதத்தை மன்னித்து, மறந்துவிடுவது இனி நடக்காது. அவர்களை ஒழிப்பதற்கு எந்த நிலைக்கும் செல்ல தயார்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இளைஞர்கள் இடையே நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து கூறியுள்ளதாவது:
பயங்கரவாதம் குறித்த விவகாரத்தில், நம் நாட்டின் நிலைப்பாடு, 2014க்குப் பின் மாறியது. பயங்கரவாதத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
ஆதரவு
கடந்த, 2008 நவ., 26ல், மும்பையில் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. அப்போது, அது தொடர்பாக மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆலோசனை நடத்தியது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால், அதிக இழப்பு ஏற்படும் என்பதால் எதுவும் செய்யாமல் இருப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா சந்திக்கும் மிகவும் கடுமையான அண்டை நாடாக பாகிஸ்தான் உள்ளது.
பயங்கரவாதம் என்பது, பாகிஸ்தானில் இருந்து, 2008 மும்பை தொடர் தாக்குதலில் இருந்துதான் துவங்கியது என்று கூற மாட்டோம். நாடு சுதந்திரம் அடைந்தபோது, பிரிவினையின்போது அது துவங்கியது. அப்போது காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் அரசும் ஆதரவு தெரிவித்தது.
ஊடுருவல்
ஊடுருவல்காரர்களை விரட்டியடிக்க நம் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. ஆனால், அப்போது இருந்த மத்திய அரசு, ஐ.நா.,வுக்கு சென்றது.
அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் ஊடுருவல்காரர்கள் நசுக்கப்பட்டிருப்பர்.
நம் நாடும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2-014ல் மத்தியில் ஆட்சி அமைந்தபின், பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நிலைப்பாடு எடுக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு என்று எந்த விதிகளும் கிடையாது.
அதனால், பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் எந்த விதிகளும் இருக்க முடியாது என்பது நம்முடைய நிலைப்பாடு.
நம்மை தாக்கும் பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்களை அழிப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானோம்.
ஒவ்வொரு முறையும் பயங்கரவாத சம்பவம் நடக்கும்போது, அதை மன்னித்து, மறந்துவிடுவது இனி நடக்காது. அவ்வாறு செய்தால், எப்போதுதான் பயங்கரவாதம் நிறுத்தப்படும். அதனால், பதிலடிதான், பயங்கரவாதத்துக்கான பதிலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

